சேலம், அக்.4: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் எஸ்ஐ உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில், உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. தற்போது அத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் தங்களது எழுத்து தேர்வு நுழைவு சீட்டு நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுக வேண்டும். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதிவாய்ந்தவர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.
