×

அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு: பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?

கோவை: பாஜவுடனான கூட்டணி முறிந்துள்ள நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசி உள்ளது மீண்டும் கூட்டணி ஏற்படுமா என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா பற்றி தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை பேசிய கருத்தால் அதிமுக, பாஜ கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக-பாஜ கூட்டணி முறிவால் தமிழ்நாடு அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கூட்டணி முறிவு பற்றி விமர்சனம் செய்ய தமிழ்நாடு பாஜ தலைவர்களுக்கு டெல்லி தலைமை தடை விதித்தது. இதனால் எப்போதும் வீரவசனம் பேசும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பொட்டி பாம்பு போல் அடங்கி இருந்தனர். கூட்டணி தொடர்கிறதா? முறிந்ததா என்பது பாஜ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் பாஜ தேசிய தலைமை அறிவிக்கும் என்று மட்டும் கூறி பாஜ தலைவர்கள் நழுவி வருகின்றனர்.

ஆனால், அதிமுகவுடன் கூட்டணி தொடர பாஜ நிர்வாகிகள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அதிமுக தலைவர்கள், ‘பாஜவுடன் இனி கூட்டணியே இல்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி’ என்று கூறி வருகின்றனர். அதிமுக-பாஜ கூட்டணி முறிவு பாஜ தேசிய தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்ததால், விரிவான அறிக்கை அளிக்க அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தலைமை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அவரும் டெல்லி தலைமையிடம் விரிவான அறிக்கையை அளித்தார்.

இதையடுத்து, டெல்லி வர அண்ணாமலைக்கு தலைமை உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், ‘பாஜவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது, என்னுடைய முடிவு அல்ல. 2 கோடி தொண்டர்களின் முடிவு’ என்று ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று முன்தினம் எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்த சூழலில், கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரும், பாஜவின் பொது செயலாளருமான பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழ்நாட்டில் இருந்த ஒரு நல்ல கூட்டணியை கெடுத்து விட்டீர்கள். தமிழகத்தில் பாஜ தோல்விக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். கொஞ்ச நாளைக்கு அதிமுக குறித்தோ, கூட்டணி குறித்தோ பேசாதீர்கள்’ என்று செம்ம டோஸ் விட்டுள்ளார். அண்ணாமலை மீது கோபமாக இருந்ததால் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அவரை சந்திக்க மறுத்துவிட்டனர். இதற்கிடையே, சென்னையில் பாஜ நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலே நேற்று நடந்தது.

அதன்பின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேசி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்தார். கொடிசியாவில் நடந்த வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் நேற்று பங்கேற்றார். அப்போது அவரை கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென சந்தித்து பேசினர். முன்னாள் சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்எல்ஏ அமுல் கந்தசாமி, மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஏகே செல்வராஜ் ஆகியோர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர்.

அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடந்தது. அப்போது கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனும் உடன் இருந்தார். பின்னர் கொடிசியாவில் நடந்த கடன் வழங்கும் விழாவிலும் 3 அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். அதிமுக-பாஜ கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாஜவை சேர்ந்த மூத்த நிர்வாகியும், ஒன்றிய அமைச்சருமான நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் சந்தித்தது தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாஜவுடன் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ரகசியமாக டெல்லி சென்று பாஜ தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் நேரம் கொடுக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தற்போது, கூட்டணியை முறித்து கொண்ட நிலையில் ஒன்றிய அமைச்சருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து, அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு என்பது நாடகம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சேர்ந்து விடுவார்கள்’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவின் செயல்பாடுகளை பார்த்தால் மீண்டும் கூட்டணிக்காக சந்திப்பா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளது.

* தேங்காய் நாருக்காகவா? கூட்டணிக்காகவா? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்புக்கு பின் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை போன்ற பகுதிகளில் விவசாயிகளின் தேங்காய் நார் தொழில் நலிவடைந்ததை தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைக்காக நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்தோம். மேட்டுப்பாளையத்தில் புதிதாக வங்கி ஒன்று துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் வைத்துள்ளார். வால்பாறையில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வைத்துள்ளார். இவை அனைத்தையும் தகுந்த முறைப்படி சரி செய்து தருகிறேன் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜ-அதிமுக கூட்டணி குறித்து எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தெரிவிப்பார். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்’’ என்றார்.

* நிர்மலா சீதாராமனுக்கு ‘அம்மா’ பட்டம்
கொடிசியாவில் நடந்த விழா மேடையில் நிர்மலா சீதாராமனை ‘அம்மா… அம்மா…’ என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். இதுகுறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்கு அம்மா என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான். இப்போது மரியாதை நிமித்தமாக அம்மா என்று கூறினேன்’’ என்று விளக்கமளித்தார்.

The post அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு: பாஜவுடன் மீண்டும் கூட்டணியா? appeared first on Dinakaran.

Tags : AIADMK MLAs ,Minister ,Nirmala Sitharaman ,BJP ,Coimbatore ,Union Finance Minister ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...