×

நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம நத்த நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் நேற்றுமுன்தினம் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், ஆவூர் பகுதியில் உள்ள கிராம நத்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நிலத்தை மீட்க கோரியும் விவாதிக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டு, ஆவூர் கிராம பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்தனர். அப்போது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், பொதுமக்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த தாசில்தார் மதிவாணன் பொதுமக்களை சமாதானப்படுத்தினார். மேலும், குறைகளை கேட்டறிய அலுவலகத்திற்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, மனு கொடுக்க வந்த கிராமப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நீதிமன்ற வளாகம் உள்ள தாலுகா அலுவலக சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், நீதிமன்ற வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், தாசில்தார் மதிவாணன் மீண்டும் பொது மக்களிடையே பேசி நேரடியாக ஆவூர் சென்று விசாரணை செய்வதாக கூறினார். அதே நேரத்தில், ஆவூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை அழைத்துச் சென்றதால் மறியல் கைவிடப்பட்டது.

The post நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kotakshi ,Ponneri ,Aur Panchayat ,Meenjur Union ,
× RELATED பழவேற்காடு கடற்கரையில் தேங்கியுள்ள...