×

ஓட்டேரியில் கஞ்சா வியாபாரி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை: சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் கோகுல் 2வது தெருவை சேர்ந்தவர் அஜிசுல்லா (25). இவரது மனைவி சாய்ரா பேகம் (30). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு மற்றநேரங்களில் கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி கூடுதல் விலைக்கு அஜிசுல்லா விற்பனை செய்துவந்துள்ளார். புளியந்தோப்பு, வேப்பேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5 குற்ற வழக்குகள் உள்ளன. கொளத்தூரில் வாடகை வீட்டுக்கு செல்வதற்கு முன்பு ஓட்டேரி தாசமகான் அலெக்சாண்டர் தெரு பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களை விற்பனை செய்துள்ளார். போலீஸ் கெடுபிடி காரணமாக கொளத்தூருக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் ஓட்டேரி தாசமகான் தர்கா தெரு பகுதியை சேர்ந்த அருண் (எ) அப்பு (35) என்பவர் கஞ்சா உள்ளிட்ட போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பு அஜிசுல்லா அருணை அழைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்துதரும்படி கேட்டபோது அருண் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அஜிசுல்லா, நண்பர்களுடன் சேர்ந்து அருணை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதன்காரணமாக அஜிசுல்லாவை பழிவாங்க வேண்டும் என்று அருண் திட்டமிட்டார். இந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில், ஓட்டேரி நியூ பேரன்ஸ் ரோடு பகுதியில் திறக்கப்படாதபூங்காவில் அருண் (எ) அப்பு, நண்பர்களான ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 11வது திருவை சேர்ந்த சின்ன அப்பு (எ) சத்தியமூர்த்தி (20), ஓட்டேரி பழைய வாழைமாநகர் 3வது தெருவை சேர்ந்த சூர்யா (எ) சப்பி சூர்யா (19), பிரிக்ளின் ரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோருடன் கஞ்சா புகைத்துள்ளார்.

அப்போது அருண் தன்னை தாக்கிய அஜிசுல்லாவை கொலை செய்து பழி தீர்க்கவேண்டும் என்று நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கஞ்சா போதையில் இருந்த 4 பேரும் உடனடியாக ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள ரவுடியான பருதீன் (22) வீட்டிற்கு சென்று 4 கத்திகளை வாங்கிக்கொண்டு அஜிசுல்லா வந்து தங்கும் அவரது உறவினர் வீடு உள்ள தாசமகான் ஸ்டாரன்ஸ் ரோடு 4வது தெரு பகுதிக்கு சென்று அங்கிருந்த அஜிசுல்லாவை சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து உயிர் தப்பிக்க ஓடியபோது ஓட, ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானிசெல்லப்பா தலைமையில் போலீசார் சென்று அஜிசுல்லாவின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அருண் (எ) அப்பு, சின்ன அப்பு, சூர்யா (எ) சப்பி சூர்யா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் நள்ளிரவு ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அருண் (எ) அப்பு, அதே பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். அஜிசுல்லாவும் அந்த தொழிலை செய்துள்ளார். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே கொலைக்கு பயன்படுத்த கத்தியை கொடுத்த ரவுடி பருதீனை கைது செய்து ஐந்து பேரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.

The post ஓட்டேரியில் கஞ்சா வியாபாரி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை: சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Otteri ,Perambur ,Ajisullah ,Gokul 2nd Street, Kolathur, Chennai ,Saira Begum ,Ganja ,
× RELATED புளியந்தோப்பு ஆடு தொட்டியில் 300 கிலோ இரும்பு திருடி விற்க முயன்றவர் கைது