×

இலை கட்சியில் இணைந்தும் மரியாதை கிடைக்காமல் தவிக்கும் மாஜி எம்பி நிலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் இணைந்தும் தனி தீவு போல இருக்கும் மாஜி எம்பி கண்கலங்கி போயிருக்கிறாராமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தின் மாஜி எம்பியான ‘கிங்’ என்ற பெயரில் முடியும் கட்சிக்காரர், இலை கட்சி ஆரம்பித்தபோதில் இருந்து உறுப்பினராக இருந்தாராம். இவர் சின்ன மம்மியின் பின்னால் அரசியல் செய்ய ெசன்றதால், இலை கட்சியில் இருந்து 2021ல் நீக்கப்பட்டாராம். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்தவர், எந்த அணிக்கும் போகாமல் இருந்தார். இவரை கடந்த ஏப்ரலில் மலைக்கோட்டை நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ள தேனிக்காரர் அழைத்தாராம். இதனையறிந்த சேலத்துக்காரர் அணியை சேர்ந்த மாஜி அமைச்சரான மணியானவர், இவரை சென்னைக்கு வரவழைத்து சேலத்துக்காரரை சந்திக்க வைத்தார். அங்கேயே இலைக்கட்சியிலும் மாஜி எம்பியானவர் இணைந்தார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு கடந்த வாரம் கட்சியில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இலைக்கட்சியை பொறுத்தவரை ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்தால் கூட பலத்த வாழ்த்து, வரவேற்பு செய்வது தொண்டர்கள் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக மாநில அளவிலான பதவி வழங்கியும் கூட, தான் வசிக்கும் கடலோர மாவட்டத்திலிருந்து, கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, சார்பு அணி பொறுப்பாளர்கள் என ஒருவர் கூட நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்கவில்லையாம். மேலும், தான் ெசால்லும் ஆலோசனைகளையும் யாரும் மதிப்பதில்லை என ‘கிங்’ என்று பெயரில் முடியும் மாஜி எம்பியானவர் பயங்கர மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

சும்மாயிருந்த நமக்கு பதவியை கொடுத்து, இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதாகவும், போகப்போக என்னவெல்லாம் நடக்க போகிறதோ என நெருங்கியவர்களிடம் எல்லாம் புலம்பித் தவித்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் பல ஆண்டுகள் இருந்தவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, வேறு அணியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்ததால் யார் டென்ஷனில் இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் அணி பிரச்னை இன்னும் முடிந்தபாடில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்தாலும் மனதளவில் சேலம்காரரை ஏற்காத, தேனி ஆதரவாளர்கள்… தேனிகாரரை ஏற்காத சேலம் தலைவரின் ஆதரவாளர்கள் என்று அரசியலில் பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கு. இந்நிலையில், மலைக்கோட்டை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த மாஜி அமைச்சர், தேனிக்காரர் அணிக்கு தாவினார்.

இதனால் இலை கட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டாக இந்த பதவிக்கு யாரும் நியமிக்கவில்லையாம். இந்த பதவியை பிடிக்க மாஜி எம்பி, மாஜி அமைச்சர், மாவட்ட மாணவரனி செயலாளர், மாநில இளைஞரணி இணை செயலாளர், முன்னாள் அரசு கொறடா ஆகியோர் இடையே கடும் போட்டி இருந்தது. இந்த போட்டியில் மாநில இளைஞரணி இணை செயலாளர், முன்னாள் அரசு கொறடா ஆகியோர் குக்கர் கட்சிக்கு சென்று திரும்பியவர்கள் என்பதால் அவர்களுக்கு பதவி கொடுக்க கூடாது என இலை கட்சிக்குள்ளேயே எதிர் தரப்பினர் போர்க்கொடி தூக்கினாங்க. கடைசியில் மாநகர் மாவட்ட செயலாளர் பதவி ரேசில் மாநில இளைஞரணி இணை செயலாளர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதே போல் அமைப்பு செயலாளராக முன்னாள் அரசு கொறடா நியமிக்கப்பட்டார்.

மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க மல்லுக்கட்டியவர்கள் சேலம்காரர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம். இலை கட்சியில் பல்வேறு பிரச்னைகள், பிற அணிகளில் இருந்து கரன்சிகளை காட்டி இழுக்க முயன்றும், கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தோம். இலை கட்சியில் 3 அணியாக உடைந்த போது கூட தேனிக்காரர், குக்கர் தலைமையானவருடன் செல்லாமல் சேலத்துக்காரருக்கு பக்க பலமாக இருந்து வந்தோம். குக்கர் கட்சிக்கு சென்று சமீபத்தில் திரும்பியவர்களுக்கு பதவி கொடுத்தது என்ன நியாயம் என நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை டென்ஷனில் இருக்காங்களாம். ஆக மொத்தம் மலை கோட்டை மணல் கோட்டையாக மாறும் நிலை சேலம்காரரால் மாற்றப்பட்டுள்ளது என்று இலை கட்சியின் முக்கிய தலைகள் மலை கோட்டை மாவட்டத்தில் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியில இருந்துட்டு, தாமரை கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாக யார் மீது பழி விழுந்திருக்கு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சிக்கும், இலைக்கட்சிக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்ட நிலையில, இனி கூட்டணி இல்லைன்னு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதுக்கு முன்னாடியே வெயிலூர் எம்பி தொகுதியில போட்டியிட்ட 3 எழுத்து சொந்தக்காரர் தேர்தல்ல தோல்வி அடைந்ததற்கு இலைக்கட்சியினரின் துரோகம்தான் காரணம்னு பேசினாரு. இதுனால வெயிலூரை பொறுத்தவரை அப்போதே கூட்டணி முறிந்த கதைதான்.

இதுக்கிடையில தாமரை கட்சி தலைமைக்கு இலைக்கட்சியை சேர்ந்த 6 மாஜி அமைச்சருங்க சிலீப்பர் செல்களாக வேலை பார்க்குறதா தகவல் வெளியானது. இதுல வெயிலூர் வீரமானவரின் பெயரும் இருக்குது. இதுனால வெயிலூர், மிஸ்டர் பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த இலைக்கட்சி நிர்வாகிங்க கட்சியில இருக்கலாமா, வேண்டாமான்னு குழப்பத்துல இருக்காங்களாம். சமயம் பார்த்து ஒட்டுமொத்தமா தொண்டர்களுடன் வேறு முக்கிய கட்சிக்கு போயிடலாம்னு இலைக்கட்சி நிர்வாகிங்க ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்களாம். அதேபோல நமக்கு துரோகிகள் பட்டம் கட்டிய தாமரை கட்சி பக்கம் மட்டும் போகவே கூடாதுன்னு திட்டவட்டமா இருக்காங்களாம்…’’என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சியில் இணைந்தும் மரியாதை கிடைக்காமல் தவிக்கும் மாஜி எம்பி நிலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,Maji MP ,wiki ,Peter ,
× RELATED இரட்டை இலையில் தான் போட்டி: ஓபிஎஸ் திட்டவட்டம்