×

ஆட்டோ மீது விழுந்து, மோதியதாக நாடகமாடி வடிவேலு காமெடி பாணியில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு: பெண்கள் உட்பட 4 பேருக்கு வலை

 

சென்னை, அக்.2: கருப்பசாமி குத்தகைதாரர் என்ற திரைப்படத்தில், வாகனம் மோதியதாக நாடகமாடி பணம் பறிக்கும் நோக்கில், நடிகர் வடிவேலு, ஒரு சிறுவனை பைக் மோதும்படி சாலையில் விழ வைத்து, பணம், நகையை பறிப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பொன்னியம்மன் மேடு, தணிகாச்சலம் தெருவை சேர்ந்தவர் பால செல்வவிநாயகம் (62). இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 27ம் தேதி மாலை கொளத்தூரில் இருந்து எழும்பூருக்கு தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

புரசைவாக்கம் மேனாட் தெரு, சுந்தரம் லேன் சந்திப்பு அருகே சென்றபோது, திடீரென 2 பெண்கள் ஆட்டோ மீது வந்து விழுந்தனர். அப்போது, வேண்டும் என்றே எதற்கு ஆட்டோ மீது விழுகிறீர்கள், என டிரைவர் பால செல்வவிநாயகம் கேட்டுள்ளார். அதற்கு 2 பெண்கள், ‘‘எங்கள் மீது ஆட்டோவை மோதிவிட்டு. எங்களையே கேள்வி கேட்கிறீயா,’’ என கூறி தகராறு செய்தனர். பிறகு 2 பெண்களும் போன் செய்து, உதவிக்கு 2 நபர்களை அழைத்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த 2 வாலிபர்கள், ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கி, மோதியதற்காக மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். டிரைவரிடம் பணம் இல்லாததால், அவர் வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல், குழப்பமடைந்த ஆட்டோ டிரைவர் பால செல்வவிநாயகம், இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, அதே பகுதியை சேர்ந்த கலா (65), தேவி (38) ஆகியோர் திட்டமிட்டு பணம் பறிக்கும் நோக்கில், தனது நணபர்கள் மூலம் நாடகமாடி செல்போன் பறித்தது உறுதியானது. பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பெண்கள் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்த சம்பவத்தால், புரசைவாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆட்டோ மீது விழுந்து, மோதியதாக நாடகமாடி வடிவேலு காமெடி பாணியில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு: பெண்கள் உட்பட 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Natakmadi Vadivelu ,Chennai, ,Vadivelu ,
× RELATED பிரபா ஒயின்ஷாப் ஓனரா கடையை எப்ப...