×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜ செல்வாக்கு வெட்டவெளிச்சமாகி விடும்: கே.பி.முனுசாமி எம்எல்ஏ பாய்ச்சல்

கிருஷ்ணகிரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜவின் செல்வாக்கு வெட்ட வெளிச்சமாகிவிடும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, நேற்று அளித்த பேட்டி: கடந்த 2 நாட்களுக்கு முன், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக ஏன் வெளியேறுகிறது என்ற விளக்கத்தையும், பாஜ கட்சியை நாங்கள் ஏன் வெளியேற்றினோம் என்பதையும் மிகவும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

ஆனால், சமூக வலைதளங்களில் சிலரும், ஒரு சில அரசியல் விமர்சகர்களும் பல்வேறு கருத்துக்களை சொல்லி, மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜவின் அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியே நகைப்புக்குறியது. மக்களை வேறு விதமாக திசை திருப்புவதற்காக சமூக வலைதளங்களும், ஒரு சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் மாறி மாறி கருத்து சொல்வதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா கட்சியும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே?. பல மாநிலங்களில் தேசிய கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரவே முடியாது. தமிழக மக்களின் உணர்வுகளே வேறு. வரும் நாடாளுமன்ற ேதர்தலில், பாஜவுக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது, அவர்களின் செல்வாக்கு என்ன என்பதை அவர்களே ெதரிந்து ெகாள்வார்கள். அதிமுக குறித்து எச்.ராஜா கண்மூடித்தனமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். நாங்கள் விரல் காட்டியதால் எம்எல்ஏ ஆனவர்தான் அவர். ஒன்றிய பாஜ அரசுக்கு, பல்வேறு சட்ட மசோதாக்கள் இயற்ற அதிமுக ஆதரவு அளித்ததை மறந்து விடக்கூடாது. தமிழ்நாட்டு அரசியலில் நம்பகத்தன்மை இல்லாத ஒரு அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான். நம்பிக்கை துரோகத்தின் சின்னம் பண்ருட்டி ராமச்சந்திரன், இப்போது தனது நம்பிக்கைக்கு உரியவர் ஓ.பன்னீர்செல்வம் என்று சொல்கிறார். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜ செல்வாக்கு வெட்டவெளிச்சமாகி விடும்: கே.பி.முனுசாமி எம்எல்ஏ பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,KP Munusamy ,MLA ,Krishnagiri ,AIADMK ,Deputy General Secretary ,KP Munuswamy ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...