×

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: 10 கோல் போட்டு சாதனை

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. பரபரப்பான இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி பாகிஸ்தான் கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய வீரர்கள் அலை அலையாய் தாக்குதல் நடத்தி ஆதிக்கம் செலுத்தினர். மன்தீப் சிங் 8வது நிமிடத்திலேயே அமர்க்களமாக கோல் அடித்து கணக்கை தொடங்கி வைக்க, ஹர்மன்பிரீத் சிங் 4 கோல் அடித்து (11’, 17’, 33’ மற்றும் 34வது நிமிடம்) பாக். தரப்பை ஸ்தம்பிக்க வைத்தார். இடையில் சுமித் தன் பங்குக்கு 30வது நிமிடதில் ஒரு கோல் போட்டார்.

பதில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது கான் 38வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். எனினும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 10 கோல் போட்டு புதிய சாதனை படைத்தது. வருண்குமார் 2 கோல் அடிக்க (41’, 54’), ஷம்ஷேர் சிங் (46’), லலித் குமார் உபாத்யாய் (49’) தலா ஒரு கோல் போட்டனர். பாகிஸ்தான் வீரர் அப்துல் ராணா 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். லலித் குமார் நேற்று தனது 150வது சர்வதேச போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

The post பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: 10 கோல் போட்டு சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Men's Hockey A Division League ,Asian Sports Competitive Series ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா