×

ஆண்கள் ஸ்குவாஷ் குழு போட்டியில் இந்தியா தங்கம் வென்று அமர்க்களம்: பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் குழு ஸ்குவாஷ் போட்டியில், இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. பரபரப்பான இறுதிப் போட்டியில் சவுரவ் கோஷல், மகேஷ் மங்கோங்கர், அபய் சிங் (25 வயது, சென்னை) ஆகியோர் அடங்கிய இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் போட்டியில் பாகிஸ்தானின் இக்பால் நசீருடன் மோதிய மகேஷ் மங்கோங்கர் 8-11, 3-11, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவ, இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்து 2வது போட்டியில் களமிறங்கிய நட்சத்திர வீரர் சவுரவ் கோஷல் 11-5, 11-1, 11-3 என நேர் செட்களில் பாக். வீரர் கான் முகமது ஆசிமை வீழ்த்தி பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி போட்டியில் பாகிஸ்தானின் நூர் ஸமானுடன் இந்திய வீரர் அபய் சிங் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய அபய் 11-7 என வென்று முன்னிலை பெற்ற நிலையில், கடுமையாகப் போராடிய நூர் ஸமான் 11-9, 11-8 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

4வது செட்டில் சுதாரித்துக் கொண்டு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபய் 11-9 என கைப்பற்ற மீண்டும் சமநிலை ஏற்பட்டது. இதனால், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான 5வது மற்றும் கடைசி செட் ஆட்டம் பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த கலவையாக பற்றி எரிந்தது. இரு வீரர்களும் விடாப்பிடியாக மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் இழுபறியாக அமைந்த இப்போட்டியில் நூர் 2 முறை கோல்டு மெடல் பாயின்ட் வரை சென்றாலும், கொஞ்சமும் அசராமல் பதற்றமின்றி விளையாடிய அபய் சிங் 11-7, 9-11, 8-11, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் 1 மணி, 4 நிமிடம் போராடி வென்று வெற்றியை வசப்படுத்தினார். அபய் சிங்கின் இந்த அமர்க்களமான வெற்றியால் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

The post ஆண்கள் ஸ்குவாஷ் குழு போட்டியில் இந்தியா தங்கம் வென்று அமர்க்களம்: பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Tags : India ,Amarkalam ,Pakistan ,Hangzhou ,Asian Games ,Dinakaran ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...