×

புதிய வழிகாட்டு விதிகளை மீறினால் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்: என்எம்சி எச்சரிக்கை

புதுடெல்லி:புதிய வழிகாட்டு விதிமுறைகளை மீறும் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. மருத்துவ கல்லுாரி சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி தொடர்பான விதிகளை வகுக்க இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வந்த நிலையில் இது தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) என மாற்றப்பட்டது. இந்நிலையில் என்எம்சி புதிய வழிகாட்டு விதிமுறைகளை கடந்த 27ம் தேதி வெளியிட்டது. அவை மருத்துவ கல்லுாரிகளின் வருடாந்திர அறிக்கைகள்,மதிப்பீட்டு நடைமுறைகள், ஒழுங்கு முறை உத்தரவுகளை பின்பற்றுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை உள்ளடக்கியது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது; மருத்துவ கல்லுாரிகள் சட்டப்பூர்வ விதிகள், விதிமுறைகள் மற்றும் குறைந்தபட்ச தர ங்களை கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவறான ஆவணங்கள், தகவல்களை சமர்ப்பிக்கும் துறை தலைவர், கல்லூரி முதல்வர், இயக்குனர், டாக்டர் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். என்எம்சி வகுத்துள்ள வழிகாட்டு விதிமுறைகளை மீறும் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகளின்படி, மருத்துவக் கல்லூரிகள் என்எம்சிக்குள் உள்ள அந்தந்த வாரியத்திற்கு ஆண்டுதோறும் வெளிப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கையானது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அல்லது முதுகலை மருத்துவக் கல்வி வாரியம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட குறைந்தபட்ச தரநிலை விதிமுறைகள் (எம்எஸ்ஆர்) மற்றும் என்எம்சியால் வகுக்கப்பட்ட விதிகளுக்கு இணங்குவதற்கான சான்றாக இருக்க வேண்டும். மதிப்பீட்டின் போது, ​​இளங்கலை மருத்துவ கல்வி வாரியம், முதுகலை மருத்துவ கல்வி வாரியம் ஆகியவை மதிப்பீட்டிற்கான கூடுதல் தகவலைக் கோரலாம், இது கோரிக்கையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் அல்லது ஏஜென்சிகள் மூலம் என்எம்சியில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து வரும் அனைத்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது உடனடியாக நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதிய வழிகாட்டு விதிகளை மீறினால் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்: என்எம்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : NMC ,New Delhi ,National Medical Commission ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...