×

2026 தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வற்புறுத்தினர் : அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் சாடல்

ஈரோடு : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவிற்கு காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அதிமுக அறிவித்தது. பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களை அண்ணாமலை அவமதித்து பேசியதே தங்களின் முடிவிற்கு காரணம் என்று அதிமுகவினர் கூறினர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற அதிமுக பொது கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் பங்கேற்று பேசினார். அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கான உண்மையை மேடையிலேயே அவர் அம்பலப்படுத்தினார். வாக்குச் சாவடிக்கு 5 பேர் மட்டுமே உள்ள கட்சியின் தலைவரை 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டும் என பாஜக வற்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அதிமுக அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் கருப்பணன் கூறினார்.

முதலாளியாக இருந்தாலும் வேலைக்காரன் ஓரளவுக்கு தான் இறங்கி செல்ல முடியும் என்று பாஜகவை கே.சி.கருப்பணன் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அனுபவத்திற்கான வயது கூட அண்ணாமலைக்கு இல்லை என்றும் அவர் கடுமையாக சாடினார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

The post 2026 தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வற்புறுத்தினர் : அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chief Minister ,2026 elections ,Former ,AIADMK ,Minister ,KC Karuppanan Chatal ,Erode ,BJP ,chief ministerial ,2026 Tamil Nadu assembly elections ,
× RELATED சொல்லிட்டாங்க…