×

தொடர் மழை காரணமாக காஞ்சி, செங்கையில் 35 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 35 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் 201 மிமீ, உத்தரமேரூரில் 197 மிமீ, வாலாஜாபாத் பகுதியில் 131 மிமீ, குன்றத்தூர் பகுதியில் 166 மிமீ, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 179 மிமீ, செம்பரம்பாக்கம் பகுதியில் 112 மிமீ என சராசரியாக இதுவரை 164 மிமீ மழை பதிவாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை மாவட்டத்தின் சராசரி மழை அளவாக 614 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, செய்யாறு ஆறுகளில் நீர்வரத்து மற்றும் சிறிய வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. செய்யாறு ஆற்றின் குறுக்கே உள்ள அனுமந்தண்டலம், மாகறல் மற்றும் பாலாற்றில் பழையசீவரம் தடுப்பணைகள் நிரம்பி ஆற்றில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழு கொள்ளளவையும், 22 ஏரிகள் 75 சதவீதத்தையும் 69 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டி உள்ளன. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 14 ஏரிகள் முழு கொள்ளளவையும், 50 ஏரிகள் 75 சதவீதத்தையும் 102 ஏரிகள் 50 சதவீதத்ததையும் எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. காலையில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் மழை பொழியும் என காலம் மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில் ஏரிகள் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தொடர் மழை காரணமாக காஞ்சி, செங்கையில் 35 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Senkai ,Kanchipuram ,Chengalpattu district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காஞ்சியில் லேசான மழை