×

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: காணொலி காட்சி வாயிலாக நாளை நடக்கிறது

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான பணிகளை திமுக தொடங்கி செய்து வருகிறது. அந்த வகையில், மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தல் எவ்வளவு முக்கியம், வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும், சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்து வருகிறார். இதேபோல் திமுகவின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்.1ம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் விவகாரம், தேர்தல் பணிகள், தேர்தல் வெற்றி வியூகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என்று தெரிகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: காணொலி காட்சி வாயிலாக நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,DMK District Secretaries ,and Constituency Audience ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...