×

அதிமுக ஆட்சியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகளுக்கும் தண்டனை உறுதி: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, 31 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

சென்னை: வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 215 பேருக்கு தர்மபுரி அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டாத அப்போதைய அரசு (அதிமுக) தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டதாகவும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த கிராமம் முழுவதும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்களிடம் விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.வேல்முருகன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பழங்குடியின பெண்களை வன்கொடுமை செய்ததில் வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளனர்.

வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளின் பெயர்களின் பட்டியல் எடுத்தாரே தவிர குற்றவாளிகளாக சேர்க்கவில்லை. அவர் நேர்மையான முறையில் விசாரணை நடத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டுவதற்காக விசாரணை அதிகாரி குறிப்பிட்ட சிலரை மட்டுமே காட்டியுள்ளார். அதிக அளவில் சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் சம்மந்தப்பட்ட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் ஒட்டுமொத்த கிராமக மக்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்தவுடன் அப்போதைய அரூர் தொகுதி எம்எல்ஏ மற்றும் கிராம மக்களுடன் சென்று புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டது.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் வழக்கை சிபிஐ விசாரித்தது. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ விசாரிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்ற போதிலும், அவர்கள் தங்கள் வரம்பை மீறி, இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த செயல் அலுவல் ரீதியான பணியல்ல என்பதால், வழக்கு தொடர்வதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கிராமத்தினரின் சொத்துக்களை மட்டுமல்லாமல், கால்நடைகள் கோழிகளை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் திருடிச் சென்றிருக்கிறார்கள். இது அலுவல் ரீதியான பணி அல்ல.

விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பில் 75 சாட்சிகளிடம் விசாரித்துள்ளது. 324 ஆவணங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆராய்ந்து தான் இந்த தீர்ப்பை விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்று வாக்குமூலத்தில் கூறியிருக்கும் நிலையில், அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதத்தை ஏற்க முடியாது. வாச்சாத்தி பகுதியில் சில பெரும் புள்ளிகள் சந்தன கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. சந்தன கடத்தல் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்தால் உடனடியாக சோதனை சாவடிகளை அமைத்து அதை அதிகாரிகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் அந்த கிராம மக்கள் மீது குற்றம்சாட்டி அவர்கள் கொடுமைப்படுத்தியதை ஏற்க முடியாது.  காவல்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மிரட்டல் காரணமாகவே பாதிக்கப்பட்ட அந்த 18 பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூறவில்லை. சம்பவத்திற்கு பிறகு அவர்கள் மிகவும் கவலையுடனும் உடல் பாதிக்கப்பட்டும் இருந்ததால் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லவில்லை. பிறகு அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்ததால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சாட்சியம் அளித்துள்ளனர்.

அதனால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்ற மேல்முறையீட்டுக்காரர்கள் வாதத்தை ஏற்க முடியாது. 13 வயது சிறுமியையும், 8 மாத கர்ப்பிணியையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், சந்தன கடத்தல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தங்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டை கிராமத்தினர் கூறி இருக்கிறார்கள் என்று மனுதாரர்கள் வாதிட்டதை ஏற்க முடியாது. அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மனித தன்மையற்ற செயல். அதுமட்டுமல்லாமல் 8 மாத கர்ப்பிணியை கடுமையாக தாக்கியதுடன் அவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நள்ளிரவில் ரிமாண்ட் ெச்யுள்ளனர் என்று சிறை தலைமை காவலர் சாட்சியம் அளித்துள்ளார்.

சந்தன கட்டைகளை தேடுவதற்காக அந்த கிராமத்தில் உள்ள பெண்களில் 18 பெண்களை தேர்வு செய்து அழைத்துச் சென்ற போது அந்த இடத்தில் பெண் காவலர் இருந்தும் அவரையும் கிராமத்தை சேர்ந்த எந்த ஆணையும் உடன் அழைத்துச் செல்லவில்லை என்பதிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட 18 பெண்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். கிராமத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, பொய் வழக்கு என்று உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தங்கள் தவறை மூடி மறைப்பதற்காகவே கிராமத்தினருக்கு எதிராக சந்தன கடத்தல் வழக்குகளை அதிகாரிகள் பதிவு செய்திருப்பதும் தெளிவாகிறது.

வன்முறையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் மாவட்ட கலெக்டரை, மாவட்ட வன அதிகாரியோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளனர். இந்த விஷயத்தில் அவர்கள் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. விசாரணை நடத்திய தாசில்தாரும் அதிகாரிகளை பாதுகாக்கவே செய்துள்ளார். சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகே உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

அப்போதைய அரசு, பழங்குடியின பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டவில்லை. மாறாக தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அப்பாவி இளம் பழங்குடியின பெண்களின் வலியை தகுந்த இழப்பீடு வழங்குவதன் மூலம் மட்டுமே ஈடுகட்ட முடியும். எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடை அரசு வழங்க வேண்டும். அதில் 50 சதவீத தொகையை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப்பட்ட 17 பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும். (ஒருவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார்). அதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு அல்லது சுய வேலைவாய்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வாச்சாத்தி கிராமத்துக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்குள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அப்போதைய மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் தண்டனை காலத்தை அனுபவிக்கும் வகையில் அவர்களை கைது செய்வதற்கு தர்மபுரி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது மேல் முறையீட்டு வழக்கில் அந்த தண்டனை விதிக்கப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*வாச்சாத்தி மலைகிராமத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டில்லிபாபு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வாச்சாத்திக்கு வந்தனர். அதன்பின் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் இனிப்புகளை வழங்கியும், ஊட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த தீர்ப்பு, தப்பு செய்தவர்கள் எவ்வளவு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், தப்ப முடியாது என்பதற்கு ஒரு சாட்சி,’ என்றார்.

* 18 பெண்களுக்கு நடந்த கொடூரம்
சந்தன கடத்தல் வழக்கில் கிராமத்தில் உள்ள அனைவரையும் அங்குள்ள ஆலமரத்தின் அடியில் நிற்கவைத்து அவர்களில் 18 பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சந்தன மரங்களை காட்டுவதற்காக அங்குள்ள ஏரி பகுதிக்கு கூட்டிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் நடந்த கொடுமையை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக நாள் முழுவதும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அந்த 18 பெண்களும் வைக்கப்பட்டிருந்தனர். உண்மையை சொன்னால் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள். நீதிமன்ற காவலில் வைப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தெரிவிக்கவில்லை என்று மனுதாரர்கள் வாதத்தை முன் வைத்துள்ளனர். இதை ஏற்க முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post அதிமுக ஆட்சியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகளுக்கும் தண்டனை உறுதி: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, 31 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai High Court ,Chennai ,Dharmapuri Sessions Court ,Vachathi ,ICourt ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...