×

கொளத்தூர் தொகுதியில் 370 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

பெரம்பூர்: கொளத்தூர் தொகுதியில் இன்று காலை 370 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நடத்தி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கொளத்தூர், திருவிக நகர், எழும்பூர், பெரம்பூர், துறைமுகம் ஆகிய 5 தொகுதிகளில் வசிக்கும் 370 கர்ப்பிணி பெண்களுக்கு இன்று காலை கொளத்தூரில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து, நலங்கு வைத்து மகிழ்வித்தனர். இவ்விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, 370 கர்ப்பிணி பெண்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தி, அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், பெண்களைப் போற்றும் நாடு முன்னேறும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளைப் பார்த்து, இதை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. பெண்களின் முன்னேற்றத்துக்கு பக்கபலமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களின் போராளியாகவும் திகழ்கிறார்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், பெண்கள் சுயஉதவி குழுவினரின் கடன் ரத்து, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் இலவச பேருந்து திட்டம், மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருவதை பார்த்து, தமிழ்நாட்டை உலகமே வியந்து பார்க்கிறது என்று தெரிவித்தார். இதில் தாயகம் கவி எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, நிலைக்குழு உறுப்பினர் சர்ப ஜெயாதாஸ், தலைமை கழக வழக்கறிஞர் சந்துரு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அருணா, உமாமகேஸ்வரி, இந்திரா, வனிதாதேவி, உஷா, லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொளத்தூர் தொகுதியில் 370 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Minister ,Shekharbabu ,Perambur ,Dinakaran ,
× RELATED சென்னை கொளத்தூரில் மழைக்கால வெள்ளத்...