×

ரகுல் ப்ரீத் சிங் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ்த் திரையுலகில் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள ரகுல், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் மற்றும் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன்2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், தனது பிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை: வொர்க்அவுட்ஸ்: நான் ஒரு ஃபிட்னெஸ் ஆர்வலர் என்றே சொல்லலாம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினசரி ஜிம்மில் வியர்வை சிந்த உடற்பயிற்சிகள் செய்வதையோ அல்லது யோகா செய்வதையோ ஒருநாளும் நான் தவிர்ப்பதில்லை.

பொதுவாக, உடற்தகுதியை ஒரு ஃபேஷனாக ஆக்காமல், ஒரு வாடிக்கையாக, ஒருவரின் வழக்கமான ஒரு பகுதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில், ஒருநாள் வொர்க்அவுட் தவறினாலும், எனது வழக்கத்தில் ஏதோ ஒன்று காணாமல் போனதாகவே உணர்வேன். பொதுவாக, நடிகைகள் தான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. பெண்கள் ஒவ்வொருவருமே தினசரி சிறுசிறு உடற்பயிற்சிகளாவது செய்து தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று, சில பெண்கள் பீரியட்ஸ் சமயத்திலும் உடற்பயிற்சிகள் செய்வதை நான் கேள்விபடுகிறேன். இது தவறான முறையாகும்.

எனவே, அந்த காலகட்டங்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். வேண்டும் என்றால், அந்த நாள்களில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளைச் செய்யலாம். ஃபிட்னெஸ்ஸில் மனதைப் பராமரிப்பதற்கும் இடம் உண்டு. அந்தவகையில், காலையில் எழுந்தவுடனே தினமும் 20 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தாலே போதும், உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பு வெளியேறிவிடும். பொதுவாக, நான் ஷூட்டிங் இல்லாத நாள்களில் ஃபிட்னெஸூக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். காலையில ஒரு மணி நேரம் ஜாகிங், அதன் பிறகு வெயிட் லிஃப்டிங், மாலையில் யோகா என்று பொழுதைத் கழிப்பேன்.

டய்ட்: ‘டயட்’ என்ற வார்த்தையே எனக்கு பிடிப்பதில்லை ஏனென்றால், அது மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, டயட் என்ற பெயரில் உடலை வருத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அதேசமயம், சரிவிகித உணவிற்கே நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அந்தவகையில், வீட்டில் சமைத்த உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். ஆரோக்கியமான பருப்பு, ரொட்டி மற்றும் சப்ஜி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சர்க்கரை கலந்த பால்பொருட்களை பெருமளவு தவிர்த்து விடுவேன். அதுபோன்று நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதையும் தவிர்த்து விடுவேன். மேலும், இயற்கை புரதச் சத்துக்கள் நிறைந்த புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் அதிகளவில் எடுத்துக்கொள்கிறேன்.

நான் சொந்தமாக மூன்று ஜிம் வைத்திருக்கிறேன். அங்கே எக்ஸர்சைஸ் மட்டும் சொல்லிக்கொடுக்காமல், டயட் மூலமாகவும் ஃபிட்னெஸைப் பராமரிக்கிறது பற்றிப் பாடம் எடுக்கிறோம். வொர்க்அவுட் பண்றவங்களுக்குப் புரோட்டீன் ரொம்ப அவசியம். முட்டை, பால், நெய், வெண்ணெய் மாதிரியான உணவுகளைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றை மதிய நேரத்துல எடுத்துக் கொண்டால், செரிமானம் சுலபமாக இருக்கும். மேலும், தினமும் காலையில எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்த பின், லெமன் ஜூஸ் குடித்தால், தொப்பையைக் குறைக்கலாம்.

அதுபோன்று, வாரத்தில் ஒருநாள் மூன்று வேளையும் பழங்கள் மட்டும் சாப்பிடுவது வயிற்றைச் சுத்தமாக்கும். நான் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் பால் சேர்த்த டீ குடிப்பேன். மற்ற நேரமெல்லாம் பிளாக் டீ அல்லது கிரீன் டீதான். அதேமாதிரி, பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன். இல்லை என்றால், ஜூஸ் மட்டும்தான் குடிப்பேன். வீட்டில், மிளகு, சீரகம், இஞ்சி எல்லாம் வைத்துத் தயார் செய்கிற உணவு வகைகள் உடலுக்கு ரொம்ப நல்லது. அதாவது, ரசம், வெண்பொங்கல், இஞ்சி சூப் மாதிரியான உணவு வகைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுவது மூலமாக செரிமானக் கோளாறுகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

அதுபோன்று தினமும் சாப்பிடும்போது எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதை அறிந்து சாப்பிடுவது நல்லது. இதனால், அளவுக்கு அதிகமான கலோரிகளை எடுத்து கொண்டு உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும். எல்லோருமே இந்த முறையை பின்பற்றி சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பியூட்டி: தினசரி, முகத்துக்கு ஆலிவ் ஆயில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு பின்புதான் குளிக்கச் செல்வேன். இப்படி செய்வது சரும வறட்சியைப் போக்க உதவுகிறது. ஏற்கெனவே, எண்ணெய் அதிகம் வழியும் சருமமாக உள்ளவர்கள் இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள், சுடு தண்ணீரில் காலையிலும் மாலையிலும் முகம் கழுவினாலே முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.

தொகுப்பு: தவநிதி

The post ரகுல் ப்ரீத் சிங் ஃபிட்னெஸ்! appeared first on Dinakaran.

Tags : Rahul Preet Singh ,Fitness ,Dr. ,Kungumum ,Fitness! ,Dinakaran ,
× RELATED அசோக் செல்வன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!