×

வாழ்க்கை + வங்கி = வளம்

நன்றி குங்குமம் தோழி

வணிக வங்கிகள் மக்களின் சேமிப்புத் தொகையை வங்கியில் சேமிப்பு கணக்கிலோ, நடப்புக் கணக்கிலோ அல்லது வைப்புத் தொகைக்கணக்கிலோ வரவு வைத்து, அந்த இருப்புத் தொகையிலிருந்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட தொகை வரை அங்கீகரிக்கப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்காக விண்ணப்பிப்போருக்குக் கடனாக வழங்குகின்றன. மக்களின் சேமிப்பானது நாட்டின் உற்பத்தியைப் பெருக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவ அத்தகைய உற்பத்திப் பணிகளில் ஈடுபடுவோருக்கு கடனாக வழங்கப்படுகிறது.

ஒருவரின் வீட்டில் ரூ.5 லட்சத்தை பெட்டியில் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டியைத் திறந்து பார்த்தால் வைத்த பணம் ரூ.5 லட்சம் அப்படியே இருக்கும். பணத்தின் உரிமையாளருக்கும் இதனால் எந்த உபரி வருமானம் கிடையாது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்தப் பணத்தை வங்கியில் வைப்புக்கணக்கில் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்குரிய வட்டியோடு அசலும் சேர்ந்து சேமிப்பாளருக்குக் கிடைக்கும்.

வங்கியின் வைப்புத் தொகையில் செலுத்தப்பட்ட பணம் பிறரின் தேவைக்கேற்ப வங்கியால் பரிசீலிக்கப்பட்டு கடனாக வழங்குவதால் உற்பத்திக்கு முதலீடாக வங்கியின் மூலம் அந்தப் பணம் உதவுகிறது. அந்தப் பணத்தை முதலீடு செய்து தொழில் நடத்துபவர் அதன் மூலம் பெறப்பட்ட அதாவது வணிக லாபத்திலிருந்து கடனாகப் பெற்ற பணத்திற்கான வட்டியைச் செலுத்திய பிறகு அவருக்கும் முதலீடாக பணமும் அவரது உழைப்பினால் நிகர லாபம் என்னும் வருமானமும் கிடைக்கிறது.

வங்கிகள் ஒரு நாட்டின் உற்பத்தியை பெருக்கும் நோக்கில்தான் பணத்தை முதலீடு செய்கின்றன. ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் கடனைக் குறைத்து, அதிக உற்பத்தி திறன் கொண்டுள்ள துறைகளுக்கு கூடுதலாக முதலீட்டுக்கான கடனை வங்கிகள் மடைமாற்றம் செய்கின்றன. இதனால் பொருளாதாரத்தில் முதலீட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் கூடுகிறது. இவ்வகையில் வணிக வங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு பெருமளவு உதவுகின்றன. மிகச்சரியான தொழிலையும், அத்தொழிலைச் செய்யக்கூடிய நபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதற்குரிய திட்டம் மற்றும் அனுபவத்தின் மூலம் வங்கிகள் கடன் வழங்குவதால் தொழில் பெருக்கம் மற்றும் தனிநபர் வருமானத்தில் உயர்வும் ஏற்படுகிறது.

இவ்வாறு செயல்படும் வங்கிகள் ஒரு நாட்டின் எல்லைகளோடு நின்றுவிடுவதில்லை. உற்பத்திப் பொருட்களின் சந்தைகள், தனிநபர்களின் மனித ஆற்றல் என்பது ஒரு நாட்டிற்குள் மட்டுமே முடங்கிப் போவதல்ல. ஒரு நாடு பிற நாடுகளுக்கு தான் உற்பத்தி செய்த பொருட்களை வணிக ரீதியாக அனுப்புவதும், பிற நாடுகளிலிருந்து அங்கு உற்பத்தியாகும் பொருட்களை வணிக நடவடிக்கையாக வாங்குவதும் உலகில் தினந்தோறும் நடைபெறும் செயல்களாகும்.

மேலும் ஒரு நாட்டில் பயின்ற, அனுபவம் பெற்ற மனிதர் பிற நாடுகளுக்குச் சென்று பணிபுரிவதும், அதேபோல் பிற நாட்டினர் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றுவதும் உலக நடைமுறை. கல்வி கற்பதற்கோ, மருத்துவ வசதிகள் பெறுவதற்கோ, சுற்றுலாத் தலங்களைச் சென்று காண்பதற்கோ, கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளவோ ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லும் மக்களைப் பார்க்கின்றோம். மேற்குறிப்பிட்ட அனைத்துச் செயல்களிலும் வங்கிகளின் பணிகள் பெருமளவு உள்ளன. அவற்றை விரிவாகக் காண்போம், அந்நியச் செலாவணி (Foreign Exchange)ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாணயம் உள்ளது.

ஒரு நாட்டின் நாணயம், ஒரு சில நாடுகள் தவிர, மற்ற நாட்டில் செலாவணியாகப் பயன்படாது. இந்திய ரூபாயை வழங்கி லண்டனில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்க இயலாது. அதேபோல ஒரு அமெரிக்கர் தன் நாட்டு நாணயமான டாலர் நோட்டுக்களை இந்தியாவில் உள்ள திண்டிவனம் கடைத்தெருவில் தந்து தேவையானதை வாங்க முடியாது. காரணம் அந்தந்த நாட்டில் அனுமதிக்கப்பட்ட நாணயம் மட்டும் செலவாணியாகும்.

செலாவணி என்பது ‘’செல்லக்கூடியது’ என்று பொருள். ஒரு நாட்டிற்கு அயல்நாட்டிலிருந்து ஒருவர் வந்தவுடன் தான் வைத்துள்ள தன் சொந்த நாட்டின் பணத்தாள்கள் மற்றும் காசுகளை அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது முகவரிடம் செலுத்தி அதன் மதிப்பிற்கு ஈடான தான் வந்துள்ள நாட்டின் பணத்தாள்கள் மற்றும் காசுகளை பெறவேண்டும். இதற்கு அந்நியச் செலாவணி மாற்றம் என்று பெயர்.

இதேபோல அயல் நாட்டிலிருந்து பொருட்கள், இயந்திரங்கள், தளவாடங்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை, போக்குவரத்து செலவுகள், காப்பீடு மற்றும் வரிகள் உள்ளிட்ட இதர செலவுகள் மொத்தம் எவ்வளவோ அதனை இறக்குமதி செய்யும் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கு அனுப்ப அந்நியச் செலாவணி மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது இறக்குமதியாளர் தனது நாட்டின் பணத்தாள்களை ஏற்றுமதியாகும் நாட்டின் பணத்தாள்களாக மாற்றி ஏற்றுமதியாளருக்கு அனுப்ப வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் இந்த பரிவர்த்தனை பணமாக நடைபெறாமல் இணைய வழியில் வங்கிகள் மூலம் நடைபெறுகிறது.

இத்தகையப் பணிகளை வங்கிகள் உலக அளவில் செய்கின்றன.அந்நியச் செலாவணி வர்த்தகத்தின் அவசியம் அந்நியச் செலாவணி வணிகம் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் சர்வதேச வணிகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவற்றை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாகும். அந்நிய செலாவணி சந்தையில் வங்கிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன, மேலும் அவை ஏன் அந்நியச் செலாவணி வணிகத்தில் ஈடுபடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக, வங்கிகள் சர்வதேச வணிகத்தை எளிதாக்க அந்நியச் செலாவணியை வணிகம் செய்கின்றன. உலகளவில் வணிகம் செய்யும் வணிகர்கள் பரிவர்த்தனைகளை நடத்த அவரவர் நாணயங்களை மாற்ற வேண்டும். உதாரணமாக, இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் இந்திய நிறுவனத்திற்கு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மதிப்பை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும். இதற்கு அமெரிக்க நிறுவனம் தனது அமெரிக்க டாலர்களை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும். அந்நிய செலாவணி வணிகத்தை உள்ளடக்கிய நாணய பரிமாற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் வங்கிகள் இந்த பரிவர்த்தனைகளை எளிதாக்குகின்றன.

இரண்டாவதாக, வங்கிகள் அந்நியச் செலாவணி வெளிப்பாட்டை நிர்வகிக்க அந்நியச் செலாவணியை வணிகம் செய்கின்றன. மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் வங்கிகளின் லாபத்தை கணிசமாக பாதிக்கலாம். எனவே, நாணய ஏற்ற இறக்கங்களால் ஏற்படக்கூடிய இழப்புகளைச் சரிசெய்யும் விதத்தில்தான் வங்கிகள் அந்நியச் செலாவணி வணிகத்தில் ஈடுபடுகின்றன. வங்கிகள் சந்தையில் வணிகம் செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும். வங்கிகள் தங்கள் நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பணப்புழக்கத்திற்கு அணுகல் உட்பட தங்கள் வளங்களைப் பயன்படுத்தி நாணயங்களை லாபகரமாக வணிகம் செய்கின்றன.

மூன்றாவதாக, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் அந்நியச் செலாவணித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்நியச் செலாவணி வணிகம் செய்கின்றன. தனிநபர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்நியச் செலாவணி வணிகச் சேவைகளை வழங்குகின்றன. சந்தைக்கான அணுகலை வழங்குவதன் மூலமும், வணிகத்தைச் செயல்படுத்துவதன் மூலமும், சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு வழங்குவதன் மூலமும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் அந்நியச் செலாவணி வணிகத் தேவைகளை எளிதாக்குகின்றன. இந்த சேவைகளை வழங்குவதற்காக வங்கிகள் கட்டணம் பெறுகின்றன.

நான்காவதாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அந்நியச் செலாவணி கையிருப்புகளை நிர்வகிக்கவும், மாற்று விகிதங்களில் செல்வாக்கு செலுத்தவும் மற்றும் அவர்களின் பணவியல் கொள்கைகளை ஆதரிக்கவும் அந்நியச் செலாவணி வணிகத்தில் ஈடுபடுகின்றன. சந்தையில் நாணயங்களை வாங்குவது அல்லது விற்பது அடங்கும். சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல், வெளிநாட்டு நாணய வெளிப்பாட்டை நிர்வகித்தல், லாபங்களை உருவாக்குதல், வாடிக்கையாளர்களின் அந்நியச் செலாவணி தேவைகளைப் பூர்த்திசெய்தல் மற்றும் மத்திய வங்கி செயல்பாடுகளுக்கு உறுதுணையாக செயல்படுதல் ஆகிய பணிகளினால் வங்கிகள் அந்நியச் செலாவணிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அந்நியச் செலாவணி சந்தையைப் புரிந்துகொள்வதின் மூலம், இதில் நடைபெறும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் பற்றிய நுண்ணறிவைப் பெறுகிறோம். அயல்நாட்டில் கல்வி கற்பதற்கும், மருத்துவ வசதி பெறுவதற்கும், கூட்டங்கள் நடத்துவதற்கும் அல்லது பங்கேற்பதற்கும் ஒரு நாட்டிலிருந்து அனுமதி விசாவுடன் செல்வதற்கு முன், சென்று சேரும் நாட்டில் பயன்படுத்தத் தேவையான பணத்தை அந்த நாட்டு நாணயமாக மாற்றி எடுத்துச் செல்வதற்காகவும் அந்நியச் செலாவணி மாற்றப் பரிவர்த்தனைகளை வங்கிகள் செய்கின்றன. நம் நாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கிளைகள் மற்றும் முகவர்கள் மட்டுமே அந்நியச் செலாவணி வணிகம் செய்யமுடியும். அங்கீகாரம் இல்லாமல் இந்த வணிகம் செய்வது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளின்படி தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும்.

அந்நியச் செலாவணி மாற்றத்தில் ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்திற்கு எதிராக மதிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையானது டிரில்லியன் கணக்கான டாலர்களில் தினசரி வணிக நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அந்நிய செலாவணி சந்தையாகச் செயல்படுபவை முதலீட்டு மேலாண்மை நிறுவனங்கள், மத்திய வங்கிகள், வணிக வங்கிகள், வணிக நிறுவனங்கள், சில்லறை அந்நிய செலாவணி தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியவையாகும்.

இந்தச் சந்தையில் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை என்பது வெளிநாட்டு நாணயங்களின் கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கிறது. பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட மாற்று விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் நாணயத்தை மற்றொருவருக்கு மாற்றுவதே இதன் முதன்மை வணிகமாகும். பல்வேறு விதமான பரிவர்த்தனைகளை குறித்து அறிவோம்:

ஸ்பாட் பரிவர்த்தனைகள்

இந்த பரிவர்த்தனை முறை நாணயங்களை மாற்றுவதற்கான விரைவான வழியாகும். ஸ்பாட் பரிவர்த்தனை என்பது நாணய மதிப்பீட்டை ரசீதில் குறிப்பிட்டு அதில் கையொப்பமிட்ட பிறகு குறுகிய காலத்திற்குள் நாணயத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் செய்து கொள்ளும் பரிமாற்றம் அல்லது தீர்வு. இது அடிப்படையில் நாணயங்களை உடனடியாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது. இந்தப் பரிவர்த்தனை செய்வதற்கு இரண்டு வணிக நாட்கள் ஆகும். ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் ரேட் என்பது அந்த நிமிடத்தில் சந்தையில் நிலவும் மாற்று விகிதமாகும்.

முன் ஒப்பந்தப் பரிவர்த்தனைகள்

எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையான மாற்று விகிதத்தின் அடிப்படையில் நாணய மாற்று ஒப்பந்தம் வடிவமைக்கப்படுகிறது. ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட விகிதம் முன் ஒப்பந்தப் பரிவர்த்தனை மாற்று விகிதம் என அழைக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் இன்றே குறிப்பிட்ட நாணய மாற்று விகிதத்தில் வர்த்தகம் செய்வதற்கான ஒரு பிணைப்பு ஒப்பந்தமாகும். இந்த பரிவர்த்தனை சாத்தியமான விகித ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக முதலீடுகளை பாதுகாக்கும் வழிமுறையை வழங்குகிறது. வாங்குபவர் அடிப்படை நாணயத்தின் மதிப்பில் உயர்வை ஊகிக்கிறார். விற்பனையாளர், மாறாக, அடிப்படை நாணயம் மதிப்பில் வீழ்ச்சியடையும் என்று எண்ணுகிறார். வர்த்தக நேரத்தில் இந்த வேறுபாடு எதிர்கால வர்த்தகங்களை ஸ்பாட் பரிவர்த்தனைகளிலிருந்து வேறுபடுத்துகிறது..

எதிர்கால பரிவர்த்தனை

எதிர்கால பரிவர்த்தனைகளும் முன் ஒப்பந்தப் பரிவர்த்தனைகளைப் போலவே இருவருக்குமான ஒப்பந்தங்களைக் கையாளுகின்றன. இருப்பினும், எதிர்கால பரிவர்த்தனைகளின் எதிர்கால ஒப்பந்தம் என்பது ஒரு குறிப்பிட்ட நாணயத்தினை, பொருளை, சொத்தினை எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்க அல்லது விற்பதற்கான சட்ட ஒப்பந்தமாகும். எதிர்கால ஒப்பந்தம் காலாவதியாகும் போது அடிப்படை சொத்தை வாங்குவதற்கும் பெறுவதற்கும் ஒப்பந்ததாரர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். மேலும் பணம்
செலுத்தப்படும் குறிப்பிட்ட நேரம் ஒப்படைக்கும் தேதி ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றன. சில ஒப்பந்தங்களின் கட்டளைகளின்படி ஒரு குறிப்பிட்ட அளவு பணம் உத்தரவாதமாக முன்கூட்டியே செலுத்தப்படுகிறது;

பரிவர்த்தனை பரிமாற்றம்

இரண்டு முதலீட்டாளர்களுக்கு இடையே ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு கரன்சிகளை கடனாக வழங்கல் மற்றும் கடனாகப் பெறுவது ஸ்வாப் பரிவர்த்தனைகள். ஒரு முதலீட்டாளர் ஒரு நாணயத்தை கடனாகப் பெற்று அதை இரண்டாவது முதலீட்டாளருக்கு இரண்டாவது நாணயமாக திருப்பிச் செலுத்துகிறார். பரிமாற்ற பரிவர்த்தனைகள் அந்நிய செலாவணி மாற்ற இழப்பு ஏற்படும் நிலைக்கு உள்ளாகாமல் கடமைகளை செலுத்த செய்யப்படுகின்றன.

விருப்பப் பரிவர்த்தனைகள்

ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தில் ஒரு மதிப்பிலிருந்து மற்றொரு மதிப்பிற்கு நாணயத்தை மாற்றுவது முதலீட்டாளருக்கான விருப்பமாகும். ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் நாணயத்தை மாற்றுவதற்கான உரிமை உள்ளது, அவ்வாறு அனுமதிப்பதே விருப்பப் பரிவர்த்தனை. அந்நியச் செலாவணி மாற்றம், அவற்றை நிர்வகிக்கும் சட்டங்கள் அவற்றின்படி இயங்கும் வங்கிச் சேவைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

The post வாழ்க்கை + வங்கி = வளம் appeared first on Dinakaran.

Tags : Life + Bank ,Dinakaran ,
× RELATED நதியை கொல்லும் நம்பிக்கை… மீட்டுருவாக்கம் செய்யும் பெண்கள்!