×

அக்.1 முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்து நகர், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் மக்கள் விடுமுறை மற்றும் சொந்த ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கு பெறுவதற்கு சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். இதனால், மதுரை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரயில் முன்பதிவுகளும் விரைவாக தீர்ந்து விடுகின்றன. சென்னையில் இருந்து மதியம் 2.50க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு இரவு 10.40க்கு சென்று விடுகிறது. 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நெல்லைக்கு சென்று விடுவதால் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க பெரிதும் விரும்புகின்றனர். வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதனிடையே, தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அக்.1ம் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக 20 நிமிடத்துக்கு முன்னதாக இரவு 7.50 மணிக்கு இனி புறப்படும்.

திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக 1.05 மணிக்கும், மதுரை ரயில் நிலையத்திற்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும் வந்து சேரும். அதேபோல் திருநெல்வேலிக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 6.05 மணிக்கு இனி சென்றடையும். கொல்லம் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கே சென்று விடும். கொல்லத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு வந்த இந்த ரயில், இனி 50 நிமிடம் முன்னதாக புறப்படும். அதாவது மதியம் 2.50 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை எக்மோருக்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அக்.1 முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Railway ,Madurai ,Express ,Muthu Nagar ,Senthur ,Chennai ,Southern Railway ,
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த கோரிக்கை