பெங்களூரு: பெங்களூருவில் பட நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார். பெங்களூருவில் சித்தா பட நிகழ்ச்சியின்போது கன்னட அமைப்பினரால் நேற்று சித்தார்த் வெளியேற்றப்பட்டார். சித்தார்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையை முற்றுகையிட்டு கன்னட அமைப்பினர் முழக்கமிட்டனர். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கன்னட அமைப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறவே நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து சித்தார்த்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட செய்தியில், நீண்ட காலமாக தொடரும் காவிரி பிரச்னையை தீர்க்காத அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்காத எம்.பி.க்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக சித்தார்த் போன்ற நடிகரை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கன்னடனாக, கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் பட நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார். கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட சிவராஜ்குமார் மேடையிலேயே மன்னிப்பு கோரினார்.
சினிமா நிகழ்ச்சியில் இருந்து நேற்று சித்தார்த் வெளியேற்றப்பட்டது மன வேதனை அளிக்கிறது. இப்படி நடந்து கொள்வது கர்நாடகர்களின் கலாச்சாரம் அல்ல. எல்லா மொழி படங்களையும் பார்க்கக்கூடியவர்கள் கன்னட மக்கள்; அனைத்து கன்னடர்களின் சார்பிலும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் சிவராஜ்குமார் கூறினார்.
The post மன வேதனை அளிக்கிறது!: பெங்களூருவில் பட நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு மன்னிப்பு கோரினார் கன்னட நடிகர் சிவராஜ்குமார்..!! appeared first on Dinakaran.