×

குஜிலியம்பாறையில் நான்கு வழிச்சாலை பணியின் போது காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்

*விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக செல்கிறது. குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்- கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகளவு உள்ள இவ்வழித்தடம் இருவழிச்சாலையாக இருந்து வந்தது.

இதையடுத்து வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், வாகன விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் திண்டுக்கல்- கரூர் மாநில நெடுஞ்சாலை வழித்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை வழியாக மாவட்டத்தின் எல்லை முடிவு டி.கூடலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இவ்வழித்தடத்தில் உள்ள குறுகிய பாலங்கள் முழுவதும் அகற்றப்பட்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் நான்கு வழிச்சாலைக்காக பள்ளம் தோண்டும் போது வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து ஏற்பட்ட நீர்கசிவு தொடர்ந்து சென்றதால், நாளடைவில் அதிகளவில் தண்ணீர் வெளியேறியது. இதனால் இச்சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே மாவட்ட குடிநீர் வடிகால் அதிகாரிகள் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சரிசெய்து, சாலையில் தண்ணீர் வீணாகி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குஜிலியம்பாறையில் நான்கு வழிச்சாலை பணியின் போது காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Kujiliamparai ,Gujiliambarai ,Kujiliambarai ,Dinakaran ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...