×

தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சியில் ரூ.65 லட்சத்தில் முருங்கை நாற்று பண்ணை

*வளரிளம் பெண்கள் வீட்டில் வளர்க்க திட்டம்

*மகளிர் சுய உதவிக்குழுவினர் பராமரிப்பு

கரூர் : தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சியில் ரூ.65.50 லட்சத்தில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மகளிர் குழுவினர் பாரமரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியணை ஊராட்சியில் முருங்கை நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது,கரூர் மாவட்டத்தில் உள்ள 2022-23ம் ஆண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முருங்கை நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு அதன் மூலம் மயில்கொன்றை, அயல்வகை போன்ற மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 22 தோட்டக்கலை நாற்றங்காலில் ரூ. 28 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் 15,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் சாலையின் இருபுறங்களிலும் வேம்பு, புளியமரம் போன்ற மரக்கன்றுகள் மற்றும் பொது இடங்களில் ஆல மரம், அரச மரம் போன்ற கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

மேலும், புங்கை போன்ற மர வகைகள் ஊராட்சிகளில் உள்ள தெருக்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 8 ஒன்றியங்களிலும் நாற்றங்கால் ரூ. 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு, நெல்லி, மாதுளை, சப்போட்டோ, கொய்யா போன்ற பழ வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 50 முருங்கை நாற்றங்கால் பண்ணை ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு, முருங்கை நாற்றங்கால் 30 செ மீ முதல் 4 அடி உயரம் வரை ஆரோக்கியமாக வளர்க்கப்பட்டு மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் தகுந்த இடத்தில் நடப்பட்டு மகளிர் சுய உதவிக் குழு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

முருங்கை இலை மற்றும் காய்களில் அதிக இரும்புச் சத்துள்ளதால் இதனை பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள் உட்கொள்வதால் ரத்த சோகை தடுக்கப்படும். ஆரோக்கியமான ஊராட்சிகளை உருவாக்கிடவும் முருங்கை நாற்றங்கால் வளர்க்கப்பட்டு சுய உதவிக்குழுக்கள் மூலம் அனைத்து வளரிளம் பருவ மகளிர் உள்ள வீடுகளிலும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும், சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பருவமழைக் காலங்களில் நீராதாரம் சேகரிக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், வெப்பச் சலனத்தால் ஏற்படக் கூடிய அதிகப்படியான வெப்பநிலையை சீராக்கிட இவை பெரும்பங்கு வகிக்கிறது என்றார்.

இந்த நிகழ்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, ஊரக வளர்ச்சி பொறியாளர் இளஞ்சேரன், உதவி செயற்பொறியாளர் பூர்ணிமாதேவி, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வெள்ளியணை ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சியில் ரூ.65 லட்சத்தில் முருங்கை நாற்று பண்ணை appeared first on Dinakaran.

Tags : Vellianai ,Dandoni Union ,Vellianai Panchayat ,Moringa ,Dandoni ,Union ,Velliani Panchayat ,Dinakaran ,
× RELATED A50 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவி...