×

இலக்கை தீர்மானி வெற்றியை வசப்படுத்து

ஒவ்வொரு நாளும் சிறு,சிறு தளிர்களை விட்டுக் கொண்டே இருக்கின்ற சிறு செடி, பல ஆண்டுகளுக்கு பின்னர் பெரிய மரமாக மாறிவிடுகின்றது.அது போல தான் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு,சிறு முயற்சியும் அதற்கு கிடைக்கும் பலனும் ஒன்றாகச் சேர்ந்து மாபெரும் வெற்றியாக உங்களுக்குத் கிடைக்கின்றது.நொடிகள் தோறும் முயற்சிச் சிறகுகளை அசைத்துக் கொண்டே யிருங்கள். புகழ்மிக்க தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்பகாலத்தில் புதியகண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.பேசுகின்ற பேச்சை,ஒலி அலைகளாக மாற்றி,அதனை மிக அதிக ஒலிகொண்ட ஒலி அலையாக மாற்ற வேண்டும் என்று திட்டத்தோடு ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கவில்லைதிட்டமிட்டு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்ட பின்பும் நமக்கு வெற்றி கிடைக்கவில்லையே என மனம் வருந்தினார். தாமஸ் ஆல்வா எடிசனின் உதவியாளர் ஒருநாள் அவர் எடிசனிடம் வந்துநான் இந்த வேலையை விட்டு விடுகிறேன். வேறு எங்காவது வேலை தேடிச் செல்கிறேன் என்றார்.தாமஸ் ஆல்வா எடிசன் அவரை அழைத்து பொறுமையாகச்சொன்னார். நீங்கள் என்னோடு பல ஆண்டுகளாக உதவியாளராக இருக்கிறீர்கள்.நாம் திட்டமிட்டுதான் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம்.திட்டமிட்ட பின்பும் உடனே வெற்றி கிடைக்கவில்லை என்றால் நாம் சோர்ந்து போகக்கூடாது. நிச்சயம் நமது இலக்கை அடைவோம் என்று கூறினார்.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.முடிவில் ஆராய்ச்சியில் வெற்றி கண்டு உலகப் புகழ் பெற்றார் எடிசன்.நம்முடைய இலக்கை அடையத் திட்டமிடலுடன் கூடிய முயற்சியைக் கையாண்டால் அத்தகைய வெற்றியை யாராலும்தடுக்கமுடியாது என்பதை எடிசன் நிரூபித்து காட்டியுள்ளார். அப்படிப்பட்ட வெற்றியை பெற்றவர்தான் இளம் சாதனையாளர் தானியா சராய்.

தானியா சராய் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்.இவரது அப்பா ஆட்டோ ஓட்டுநர்.ஏழ்மையான சூழலில் பிறந்த இவர் இந்தியாவின் 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தின்படி,இவரது ITF (International Tennis Federation) ஜூனியர் ரேங்கிங் சர்வதேச அளவில் 1709 இடத்தை பெற்றுள்ளார்.விளையாட்டுத் திறமையை தனது தொடர் பயிற்சியால் தொடர்ந்து மேம்படுத்தி,ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் 16 தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி சாதிக்க வேண்டும் என்ற இலக்கையும் தீர்மானித்துள்ளார்.தானியாவின் ரோல் மாடல் செரீனா வில்லியம்ஸ்.யாருமே உங்களை நம்பாதபோது,நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து முன்னேறி சாதிக்க வேண்டும் என்றார்

செரீனா வில்லியம்ஸ். அத்தகைய நம்பிக்கையூட்டும் செரீனாவின் வார்த்தைகள் தானியாவின் வெற்றிக்கு உந்துதலாக அமைந்தது.சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் போட்டியில் தானியா பங்கேற்றிருந்தார்.14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் வகிக்கும் இலங்கையைச் சேர்ந்த சாஜிதா ராசிக்கிடம் காலிறுதிப் போட்டியில் தானியா தோற்றுவிட்டார்.ஆனாலும் அவரது மன உறுதி சற்றும் குறையவில்லை.

18 வயது மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்கள் உலகம் முழுவதும் வலம் வந்து தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள ITF World Tennis Tour ஜூனியர்ஸ் என்ற விளையாட்டு அமைப்பு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சிறந்த விளையாட்டுவீரர்கள் ப்ரொஃபஷனலாக விளையாடி வெற்றியை வசப்படுத்த இது உதவுகிறது.இருப்பினும் ஏழ்மையான குடும்பச் சூழலை பின்னணியாக கொண்ட தானியாவிற்கு வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்த தானியா இந்த ஆண்டு தொடக்கத்தில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அளவில் 3-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.அதனால் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்.இதற்கு தன் குடும்பம் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்ததே காரணம் என்கிறார் தானியா.

தானியாவின் அப்பா சாம்சன் தன்னுடைய மகள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் இருப்பதைச் சிறுவயதிலேயே அவர் கவனித்தார்.தானியாவின் தாத்தாவும் டென்னிஸ் விளையாட்டுவீரர்.இவர் வாராங்கல் மாவட்டத்தில் நர்சாபூர் லயன்ஸ் கிளப்பிற்காக விளையாடியவர்.இதனால்தான் தானியாவுக்கும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.தானியா ஆறு வயதில் ஒரு அறக்கட்டளை மூலமாக நடத்திய ரபேல் நடால் டென்னிஸ் அடமி (Rafael Nadal Tennis Academy) மையத்தில் முதன் முதலாக டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.இந்த ஃபவுண்டேஷன் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழந்தைகளுக்கு டென்னிஸ் பயிற்சியளிக்கிறது.எங்கள் சொந்த ஊருக்கு அருகில் அமைந்திருந்ததால் தானியா ரபேல் அகாடமியில் சேர்ந்தார் என்கிறார் தந்தை சாம்சன்.தனது மகளின் திறமையை மென்மேலும் மெருகேற்ற விரும்பிய சாம்சன் குடும்பத்துடன் ஹைதராபாத்திற்கு மாற்றலானார்கள்.

ஹைதராபாத்தில் சாம்சன் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். தானியாவை சானியா மிர்ஸா அகாடமிக்கு மாற்றினார்.அங்கு அவருக்கு இலவசப் பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி மையம் புறநகர் பகுதியில் அமைந்திருந்ததால் சாம்சனால் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கமுடியாமல் போனது. இருந்தபோதும் தனது மகள் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தின் காரணமாகத் தனது கஷ்டங்களை அவரது தந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.தற்போது தானியா குறிப்பாக எந்த ஒரு அகாடமியுடனும் இணைந்திருக்கவில்லை.வெவ்வேறு கோச் மூலம் பயிற்சி பெறுகிறார்.முன்னணி அகாடமிகளில் பயிற்சி பெற,பிசியோதரப்பி,ஊட்டச்சத்து ஆலோசனை,ஜிம் எனத் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்கின்றார்.என்னுடைய வருமானத்தைக் கொண்டு என்னால் முடிந்தவரை தானியாவிற்கு ஆதரவாக இருந்துவருகிறேன் என்று குறிப்பிடும் சாம்சன்,தானியா பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் தவறாமல் உடன் பயணிக்கிறார்.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடக்கும் ஏராளமான போட்டிகளிலும் தானியா பங்கேற்கவேண்டும் என விரும்புகிறார். இதனால் அவரது ரேங்கிங் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறார்.ஆனால், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான பயண செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் தயக்கம் காட்டி வருவதாக அவர் தந்தை தெரிவிக்கின்றார்.மாநில அளவிலும் (Telangana State Tennis Association)அகில இந்திய அளவிலும் (All India Tennis Association)தானியா 128 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.117 போட்டிகளில் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) பங்கேற்று வெற்றி பெற்று சாதித்துள்ளார்.2021ம் ஆண்டு முதல் பெஹ்ரைன்,நேபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.

தானியாவின் விளையாட்டுத் திறமையைப் பார்த்து பல நல்ல உள்ளங்கள் தானியாவின் இந்தப் பயணத்திற்கு ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும்,இதர வழிகளிலும் உதவி வருகிறார்கள்.அத்தகைய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தானியா நன்றி தெரிவித்துக்கொள்கிறார்.இதுபோல் ஆதரவளித்தவர்களையும், நாட்டையும் பெருமைப்படுத்தும் வகையில் கூடுதல் உத்வேகத்துடன் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்கிறார் தானியா.ஏழ்மையான குடும்பத்திலே ஆட்டோ ஓட்டுநரின் மகளாகப் பிறந்து தன்னுடைய விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு 14 வயதுக்கு உட்பட்ட இந்திய டென்னிஸ் அணியிலே இடம்பெற்று தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் தானியாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக வறுமை என்பது வெட்கத்துக்குரியது அல்ல,அது வெல்வதற்கான ஒரு ஊக்க சக்தி என்று நம்ப வேண்டும்.இவரைப் போலவே நீங்களும் இலக்கை தீர்மானியுங்கள்,வெற்றியை வசப்படுத்துங்கள்.

The post இலக்கை தீர்மானி வெற்றியை வசப்படுத்து appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சிக்கல்களைத் தீர்க்கும் அம்மன் வழிபாடு!