×

ரூ.71.60 கோடி மதிப்பிலான மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை, மாணவர் விடுதிக் கட்டடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் !!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.09.2023) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள். மீன் இறங்குதளங்கள். கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனையில் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளம் மற்றும் சேதுபவாசத்திரம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலேப்பியா (Genetically Improved Farmed Tilapia) மீன் விதைப் பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 3 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவிலும், புதுக்குடி கிராமத்தில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளங்கள்.என மொத்தம் 56 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தல்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 7 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் 7 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.இவ்விடுதிகளில், பொழுதுபோக்கு அறை, ஓய்வறை, உடற்பயிற்சிகூடம், வாசகர் அறை, உணவுக்கூடம், விடுதி பாதுகாவலர் அறை மற்றும் நவீன கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். இராதாகிருஷ்ணன். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.ந.கௌதமன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, இ.ஆ.ப., தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் என். பெலிக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.71.60 கோடி மதிப்பிலான மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை, மாணவர் விடுதிக் கட்டடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் !! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,Department of Fisheries and Fishermen's Welfare ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...