×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணை, மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

*கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணை, மலட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துனர்.
கர்நாடக மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் அணைகள் வேகமாக நிரம்பி, தமிழகத்தில் உள்ள கேஆர்பி, சாத்தனூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

சாத்தனூர் ஆணையின் முழு கொள்ளவான 119 அடி உயரத்தில் 7,321 மில்லியன் கனஅடிநீரை தேக்கிவைக்க முடியும். தற்போது அணையின் நீர்மட்டம் 113அடியை தாண்டிய நிலையில் உபரநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முதல்நாளில் 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் அணைக்கு நீர்வரத்த அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பும் அதிகரித்து தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் விழுப்புரத்தை வந்தடைந்தது. தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக தென்பெண்ணை ஆறு விளங்கி வருகிறது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில், இதிலிருந்து பிரியும் மலட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகள் மூலம் ஏரிகளில் தண்ணீர் தேக்கி, குடிநீர் ஆதாரத்தையும் பெருக்க முடியும்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக வறண்டு கிடந்த தென்பெண்ணை ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, கோடை மழையும் கைகொடுக்காத நிலையில் வறட்சி நிலவி, வடகிழக்கு பருவ மழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இருப்பினும் விழுப்புரம் மாவட்டத்தில் எல்லீஸ்சத்திரம், தளவானூர் தடுப்பணைகள் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கிறது.

எல்லீஸ்சத்திரம் அணையிலிருந்து மரகதபுரம் வாய்க்கால், ஆழங்கால் வாய்க்காலில் தண்ணீர் திருப்பி அனுப்பப்பட்டு இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏரிகளில் தண்ணீர் நிரப்பவும், குடிநீர் ஆதாரம் கிடைக்கவும் உதவியாக இருந்தது. ஆனால் அணைகள் உடைப்பினால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் கலந்துகொண்டிருக்கிறது. இது விவசாயிகள், பொதுமக்களுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தினால், அதிலிருந்து பிரியும் மலட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

₹86.25 கோடியில் அணை கட்ட இன்று டெண்டர்

விழுப்புரம் மாவட்டம் எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றில் பழமையான தடுப்பணை உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அணையிலிருந்து பிரியும் கிளை வாய்க்காலிலும் தண்ணீர் செல்லவில்லை. இதனிடையே புதிய தடுப்பணை கட்டவேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்த நிலையில் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி ரூ.8.6.25 கோடியில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த பணிகள் துவங்குவதற்கான டெண்டர் இன்று (29ம்தேதி) விடப்படுகிறது. டெண்டர் விடப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு சுமார் ஒரு மாதத்திற்கு மேல் சென்று கொண்டிருக்கும். அதற்குள் வடகிழக்கு பருவமழையும் துவங்கும் நிலையில் தடுப்பணை பணிகள் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணை, மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Malatadar, Viluppuram, Kallakkurichi District ,South Nam ,Malatara ,Viluppuram, Kallakkirichi district ,Viluppuram, Kallakkurichi district ,Malatadu Flood ,
× RELATED தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்...