×

திருப்புத்தூர் அருகே அடிப்படை வசதி கோரி மறியல்

திருப்புத்தார், செப்.29: திருப்புத்தூர் அருகே காட்டம்பூர் வழியாக மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகள் கோரி நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்புத்தூர் அருகே காட்டம்பூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிந்து வருகின்றனர். இக்கிராமத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூறி இப்பகுதி கிராம மக்கள் காட்டாம்பூர் பகுதியில் உள்ள திருப்புத்தூர்- மதுரை செல்லும் தேசிய இணைப்பு நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் நேற்று பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கோஷ்டியூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பிரகாசம் ஆகியோர் தொடர்ந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பகுதி மக்கள் அரசு அதிகாரியிடம் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வராமல் இருந்து வருவதோடு, பல மாதங்களாக தெரு விளக்கு வசதியும், சாலை வசதியும் இல்லாமல் இருந்தது.

பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகியிடம் எடுத்துரைத்தும் அதற்கான எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் எங்கள் அடிப்படை தேவைகளை அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து கிராமமக்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றி தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

The post திருப்புத்தூர் அருகே அடிப்படை வசதி கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Tiruputhar ,National Highway ,Madurai ,Kattampur ,Dinakaran ,
× RELATED கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை...