×

₹1.10 கோடி மதிப்பில் பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணிகள் 80% நிறைவு நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும்

தர்மபுரி, செப்.29: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், ₹1.10 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடிந்ததும், நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு பேரூராட்சி ஒரு வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. பாலக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில், நெல், தக்காளி, கரும்பு, மரவள்ளி, மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு காய்கறிகள் அதிகம் அளவில் செல்கிறது. பாலக்கோட்டில் புகழ்பெற்ற தக்காளி மார்க்கெட்டும், மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளன. பாலக்கோடு பேரூராட்சியின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கும், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, சேலம், கோவைக்கு நேரடியாக பஸ் போக்குவரத்து உள்ளது.

பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட், ஒன்றரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பாலக்கோடு பஸ் ஸ்டாண்டை மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, அண்ணாமலை அள்ளி, அனுமந்தபுரம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், கடந்த சில வருடங்களாக சிமெண்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது. மழை காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ₹1.10 கோடி மதிப்பீட்டில் பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், தற்காலிகமாக திரௌபதி அம்மன் கோயில் முன்பகுதியில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட், கடந்த சில வருடங்களாக சிமெண்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ₹1.10 கோடி மதிப்பீட்டில் பஸ்கள் நிற்க, தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கட்டுமானப் பணிகளும் நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் புதிய தொழில்நுட்பத்தில் தரமாக சீரமைக்கப்படுகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நவம்பர் மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,’ என்றனர்.

The post ₹1.10 கோடி மதிப்பில் பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணிகள் 80% நிறைவு நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் appeared first on Dinakaran.

Tags : Palakode bus ,Dharmapuri ,Palakodu bus ,Palakodu ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்