×

எனது படத்துக்கு சான்றிதழ் கொடுக்க சென்சார் போர்டு ₹6.5 லட்சம் லஞ்சம் வாங்கியது: விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் கடந்த 15ம் தேதி தென்னிந்திய மொழிகளில் திரைக்கு வந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ரீது வர்மா, செல்வராகவன், ‘புஷ்பா’ சுனில் உள்பட பலர் நடித்திருந்தனர். மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இப்படம் நேற்று இந்தியில் வெளியானது.

இதுகுறித்து விஷால் நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
திரையில் ஊழலை சுட்டிக்காட்டுவதும், எதிர்ப்பதும் மட்டும் போதாது. நிஜ வாழ்க்கையிலும் அதை எதிர்க்க வேண்டும். காரணம், நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் நடப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மத்திய திரைப்பட தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது.

நான் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்வதற்காக மும்பையில் எனது குழுவினர் விண்ணப்பித்தபோது, அதற்குரிய இடைத்தரகர் ஒருவர், படத்தை திரையிட 3 லட்ச ரூபாயும், சான்றிதழ் வழங்க 3.5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். படத்தின் வெளியீடு செப்டம்பர் 28ம் தேதி என்று முடிவாகிவிட்டதால், வேறு வழியில்லாமல் அந்த பணத்தைக் கொடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம். ஆனால், இது தவறான அணுகுமுறை, தவறான செயல் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

எனது திரைப்பயணத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் எதிர்கொண்டதில்லை. நான் உழைத்து சம்பாதித்த பணம் இப்படி வீணாக சென்றதில் அதிக மன வருத்தம் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தை மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் மற்றும் பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். இதுதொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. இது எனது படத்துக்காக மட்டுமல்ல, இனி வரக்கூடிய எந்த மொழி படத்துக்கும் இதுபோன்ற இடையூறுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக இதை செய்கிறேன். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன். நேற்று திரைப்படம் வெளியானதால், சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் மேனகாவுக்கு பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்றார்.

மேலும், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள விஷால், லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களாக, பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

The post எனது படத்துக்கு சான்றிதழ் கொடுக்க சென்சார் போர்டு ₹6.5 லட்சம் லஞ்சம் வாங்கியது: விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Censor board ,Vishal ,Chennai ,Aadhik Ravichandran ,Dinakaran ,
× RELATED நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்கும்...