×

பூட்டு மாவட்ட மாஜி அமைச்சரை சேலம்காரர் கைவிட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திண்டுக்கல்காரரை திண்டாட வைத்த விஐபி யாரு…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தின் இலைக்கட்சி மாஜி மந்திரியான, பெயருக்கு முன்னே ‘புரோட்டா’ புகழ் நகர்ப்பெயர் கொண்டவர், பலதரப்பட்ட வழிகளில் காய் நகர்த்தியும் தோல்வி தொட்டு, கடும் விரக்தியில் இருக்கிறாராம். இலைக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலப்பதவியை தன் மகன், மருமகன் இருவரில் ஒருவருக்கு எப்படியும் வாங்கி விட வேண்டுமென்ற முனைப்பில், சேலத்துக்காரரை பார்க்கும்போதெல்லாம் கோரிக்கை வைத்திருக்கிறார். அத்தோடு மாம்பழ நகருக்கே பயணப்பட்டு அங்கேயே அடிக்கடி முகாமிட்டும் பலமுறை அவரிடம் மன்றாடி வந்துள்ளார். மாநாடு, கூட்டமென அதிகமாக ஆட்களை அழைத்து வந்தும் சேலத்துக்காரரின் குட் புக்கில் இடம்பிடித்து, காரியம் முடித்திட பலதரப்பட்ட ஆதரவுகளையும் அள்ளித் தந்திருக்கிறார்.

ஆனாலும் கடைசி நேரத்தில் சேலத்துக்காரர் கைவிரித்து, இந்த மாநிலப்பதவியை மதுரைக்காரரின் மகனுக்கு கொடுத்து விட்டாராம். ரொம்பவும் மூட் அப்செட்டிற்கு ஆளான மாஜி, வந்து போவோர் அத்தனை பேரிடமும், ‘இப்படி பண்ணிட்டாரே என்று தனக்கு வேண்டியவர்களிடம் புலம்பி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசியல்ல உள்ள மாஜி காக்கி அதிகாரிக்கு உதவ போய் சிக்கலில் மாட்டியுள்ள காக்கி அதிகாரிகளின் நிலையை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை ‘மவுன்டன்’ கோவை மாவட்டத்துல மூன்று நாள் நடைபயணம் போனாராம். நடைபயணத்துக்காக மதியம் மூன்று மணி முதல் பத்து மணிவரை காக்கி துறை அனுமதி கேட்டு லெட்டர் அனுப்பினாங்களாம். அதன் அடிப்படையில் பல்வேறு கண்டிஷன்களோட கோவை மாவட்ட காக்கி துறையும் ‘மவுன்டன்’ நடைபயணத்துக்கு அனுமதி கொடுத்தாங்களாம்.

காக்கிகளுக்கு எழுதி கொடுத்தபடி லேட்டாக நடைபயணத்தை துவக்கினால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், லேட்டாக துவக்கியதுதான் பிரச்னையில முடிந்திருக்காம். மாலை நேரம் ‘பீக் ஹவர்’ என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம், அரசு ஊழியர்கள் அனைவரும் சாலையில் சாதாரணமாக வெளியே வர முடியவில்லையாம். அந்த அளவுக்கு சாலையை அடைத்தபடி ‘மவுன்டன்’ தரப்பு ஊர்வலமாக போயிருக்காங்க. எங்கே பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாம். இவற்றை வீடியோ எடுத்து மக்கள் அமைப்புகளில் சில, அவற்றை சென்னையில் உள்ள காவல்துறை தலைமைக்கு அனுப்பி வைச்சுட்டாங்க. இந்த வீடியோவை பார்த்த காக்கிகளின் தலைமை, ‘யாராக இருந்தாலும் கேள்வியை கேளு… பதில் சரியாக இல்லையென்றால் வழக்கு போடு என்று சொன்னார்களாம்.

இதையடுத்து, சென்னையில் இருந்து கோவை போலீசாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. இதனால பர்மிஷன் கொடுத்த காக்கிங்க ‘மவுன்டனுக்கு’ பர்மிஷன் கொடுத்துட்டு நாங்க பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கோம்னு புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி கிரீன் அமைச்சர் டென்ஷனில் இருப்பது ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த மன்னரானவர் தேனி தலைவரின் ஆதரவாளராக இருக்க, அவரே பின்னர் சேலம்காரரின் ஆதரவாளராக மாற, தேனிகாரர் அவரை தனது அணியில் இருந்து நீக்க, அவர் சேலம் தலைவரின் ஆதரவை தேட என்று வரிசையாக காட்சிகள் நிகழ்ந்து வந்தன. ஆனால் சேலம்காரரின் ஆதரவு மன்னரானவருக்கு கிடைக்கவில்லை.

இந்த வேளையில்தான் கிழக்கு மாவட்ட இலை கட்சி செயலாளராக மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த சுந்தரமானவரை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. இதனால் மீண்டும் மாவட்ட செயலாளர் பதவிக்கு வரிசையில் நின்ற பச்சையானவர் உள்ளிட்டோர் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனராம். இனி கட்சியில் மீண்டும் சுந்தரமானவர் கை ஓங்கும் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்… ஆனால் பச்சையானவர் செம கடுப்பில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற கதையை கேட்கும்போது தலை சுற்றுதே…’’ என்று சொன்னார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுபாடி பகுதியில கவர்மெண்ட பள்ளியில தொழிற்கல்வி பிரிவுல ஒரு ஆசிரியரு கடந்த சில மாசத்துக்கு முன்னாடி ஓய்வு பெற்றிருக்காரு.

ஆனா, அவரை ஒரு வருஷத்துக்கு பணி நீட்டிச்சு, மாவட்டத்தோட கல்வி அதிகாரி கிராண்ட் பர்மிஷன் கொடுத்திருக்காங்களாம். ஏற்கனவே அந்த பள்ளியில அதே பிரிவுல ஒரு ஆசிரியர் பணியாற்றி வர்றதால, அங்க எதுக்கு இன்னொரு ஆசிரியருன்னு, கல்வித்துறை வட்டாரத்துல சலசலப்பு எழுந்துச்சு. அதேசமயம், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியருக்கு மாசம் சம்பளம் ஒரு எல் தாண்டுமாம். இதனால, அதிகாரிகளோட, பார்வை அந்த பள்ளிமேல விழுந்துச்சு.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னாடி, சென்னையில இருந்து இணை இயக்குனர் அளவிலான அதிகாரிங்க நேரடியாக விசாரணை நடத்தியிருக்காங்க. அப்போது அந்த பள்ளியில் சம்மந்தப்பட்ட பிரிவுல 2 மாணவர்கள் மட்டுமே படிக்குறது, வெளிச்சத்துக்கு வந்திருக்குது. உடனே, இருக்குற 2 பேருக்கு எதுக்கு 2 ஆசிரியரு, ஓய்வு பெற்றவருக்கு ஏன் பணி நீட்டிப்புன்னு கேள்வி கேட்டு, அந்த ஆசிரியரை பணியில் இருந்து நீக்கிட்டாங்களாம். இந்த பணி நீட்டிப்புல முறைகேடு நடந்திருக்குறதாக கூறி, துணை போனவங்களுக்கு மெமோ கொடுத்திருக்காங்களாம். இந்த சம்பவம் தான் பள்ளிக்கல்வி துறையின் ஹாட் டாப்பிக்காக பேசப்படுது…’’என்றார் விக்கியானந்தா.

The post பூட்டு மாவட்ட மாஜி அமைச்சரை சேலம்காரர் கைவிட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkar ,-minister ,Bhuttu district ,wiki ,Yananda ,Dindigulkarar ,Uncle ,Peter ,Bhuttu ,district ,Dinakaran ,
× RELATED ஒரே நாளில் அனைத்து நவக்கிரக...