×

மணிப்பூர் முதல்வர் வீட்டை தாக்க மாணவர்கள் முயற்சி: போலீசார் முறியடித்தனர்

இம்பால்: மணிப்பூரில் மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முதல்வரின் பூர்வீக வீட்டை தாக்க முயன்றனர். இந்த தாக்குதல் முயற்சியை போலீசார் முறியடித்தனர். மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினர் கடந்த மே மாதம் நடத்திய ஒற்றுமை பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் 175 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் மாயமான 2 மெய்டீஸ் மாணவர்கள் சடலம் கடந்த திங்கள்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது. இத்த் தொடர்ந்து, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. .

இந்நிலையில், மாணவர்கள் மாநில முதல்வர் பிரேன் சிங்கின் பூர்வீக வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் மாணவர்களின் இந்த தாக்குதல் முயற்சியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முறியடித்தனர். இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இம்பாலில் ஹெய்ன்காங் பகுதியில் உள்ள முதல்வரின் பூர்வீக வீடு மீது மாணவர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் மாணவர்கள் வீட்டை நெருங்குவதற்கு 100 மீட்டர் தொலைவில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முதல்வர் தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். இருப்பினும், இங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கொல்லப்பட்ட மாணவன், மாணவியின் பெற்றோர் இறுதி சடங்கு செய்வதற்காக தங்களுடைய பிள்ளைகளின் சடலத்தை தேடி ஒப்படைக்கும்படி அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளனர். மாணவர்கள் இருவரது வீட்டிலும் அவர்களது புகைப்படத்தின் முன், மெய்டீ சமூக வழக்கப்படி இறுதி சடங்கு செய்யப்படும் வரை, ஊதுபத்தி ஏற்றி, மெழுகுவர்த்தி கொளுத்தி, சிறிது சாப்பாடு வைக்கப்பட்டிருப்பது காண்போரின் நெஞ்சை உலுக்குகிறது. மேற்கு இம்பால் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். உரிபோக், ஏய்ஸ்கல், சோகல்பந்த், தேரா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

* பாஜ எம்பி ராஜினாமா
மணிப்பூரை சேர்ந்த பிரபல நடிகரும் பாஜ எம்பியுமான ராஜ்குமார் சோமேந்திரா, இனக் கலவரம், மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒன்றிய அரசு கையாண்ட விதம் பிடிக்காமல் தனது எம்பி. பதவியை ராஜினாமா செய்தார். இவர் 2019ல் இம்பால் மேற்கு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின், கடந்த 2021ல் பாஜ.வில் இணைந்தார்.

The post மணிப்பூர் முதல்வர் வீட்டை தாக்க மாணவர்கள் முயற்சி: போலீசார் முறியடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Manipur ,CM ,Imphal ,Chief Minister ,Dinakaran ,
× RELATED வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு