
சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஓபிஎஸ், அண்ணாமலை, சசிகலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஓபிஎஸ், இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: “விவசாயத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரும், ‘எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை’ என்ற அமைப்பினைத் தொடங்கி வேளாண் துறைக்கும், நாட்டிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளுக்குச் சொந்தக்காரர். விவசாயிகள் அனைவரும் நிலத்திடம் நட்பு கொண்டு புதிய அறிவியல் வேளாண் முறைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று எடுத்துரைத்தவர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள். பஞ்சம், பற்றாக்குறை என்ற வார்த்தைகளே இருக்கக்கூடாது என்று நினைத்து அதற்காக பாடுபட்டவர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுடைய இழப்பு இந்திய நாட்டிற்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை இரங்கல் செய்தி:
எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்; இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான பத்மபூஷன் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா இரங்கல் செய்தி:
பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது. வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர். அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு பங்களித்தவர்.
அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியவர். உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் முதல் உலக உணவு பரிசைப் பெற்ற பெருமைக்குரியவர். மேலும், வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ஆசியாவின் நோபல் விருதான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்று தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத் துறைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
தனது சமூக நல நடவடிக்கைகளின் மூலம், தமிழக மக்களின் தேவையை பூஜ்ஜிய விலையில் பூர்த்தி செய்துள்ளார் என்று நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழாரம் சூட்டியதையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன் .வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது விஞ்ஞான ஆராய்ச்சிகளால் பயனடைந்த எண்ணற்ற விவசாய பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
The post வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஓபிஎஸ், அண்ணாமலை, சசிகலா உள்ளிட்டோர் இரங்கல்! appeared first on Dinakaran.