கிருஷ்ணகிரி: எந்த சூழலிலும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகவும், இனி எந்த காலகட்டத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது எனவும் அதிமுக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, பாஜ கட்சியினர் மாறி, மாறி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது ஏன்? என்று கே.பி.முனுசாமி விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணி முறிவு. அண்ணாமலையை பா.ஜ.க. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து கூட்டணி முறிவை அறிவித்தோம். பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
பா.ஜ.க. கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல். மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறுவது நடக்காது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது. பா.ஜ.க. தேசிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்கமாட்டோம்.
The post பாஜகவுடன் கூட்டணி முறிவு, 2 கோடி தொண்டர்களின் உணர்வு; எந்த சூழலிலும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி appeared first on Dinakaran.