×

தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களில் திருச்சி 6ம் இடம் பிடித்து சாதனை.. சென்னைக்கு 37ம் இடம்!!

திருச்சி : தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களில் திருச்சி 6ம் இடம் பிடித்துள்ளது. அதே சமயம் சென்னைக்கு 37வது இடமே கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் அதிகரித்து வரும் பெட்ரோல், மற்றும் டீசல் வாகனங்களால் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை எதிர்கொள்ள தேசிய தூய்மை காற்று திட்டத்தை ஒன்றிய சுற்றுசூழல் துறை அமல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 132 நகரங்களில் செயல்பாட்டில் உள்ள இந்த திட்டம் மூலம் காற்று மாசுவின் அளவை 20-30% குறைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 132 நகரங்களிலும் காற்று மாசை குறைக்க செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் மூலம் காற்று மாசு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு ஒன்றிய சுற்றுசூழல் துறை அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் 187 மதிப்பெண்களுடன் இந்தூர் முதல் இடத்தையும் 186 மதிப்பெண்களுடன் ஆக்ரா 2ம் இடத்தையும் 185 மதிப்பெண்களுடன் தானே 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மாநகரங்களில் திருச்சி இந்த பட்டியலில் 180 மதிப்பெண்களுடன் 6ம் இடத்தை பிடித்துள்ளது.

மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து சாலைகளில் குப்பைகளை தவிர்த்த காரணத்தால் தான் 6ம் இடம் கிடைத்துள்ளதாக கூறுகிறார் திருச்சி மேயர் அன்பழகன்.அதே சமயம் பட்டியலில் சென்னை மாநகராட்சி 37ம் இடத்தையும் கடைசி இடமான 44ம் இடத்தை மதுரை மாநகராட்சியும் பிடித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் பெருக்கமும் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணமாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களில் திருச்சி 6ம் இடம் பிடித்து சாதனை.. சென்னைக்கு 37ம் இடம்!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,chennai ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...