×

அதிநவீன வசதிகளுடன் அமைகிறது 4.0 தரத்தில் தொழில்நுட்ப மையம்; ரூ.2,877 கோடியில் அரசு ஐடிஐகள் புத்துயிர்

சிறப்பு செய்தி
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். பிளஸ் 2 மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலம் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வேலைக்கு செல்வது மற்றும் மேல்படிப்புகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அரசு ஐடிஐக்களின் தரத்தையும் உயர்த்தி அசத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மற்றும் தவறிய மாணவர்கள் தொழில்சார்ந்த பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 1966ம் ஆண்டு அரசு ஐடிஐக்கள் துவங்கப்பட்டன. தமிழ்நாட்டில் தற்போது 110 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், ஐடிஐ படிப்பை மிக சாதாரணமாகவே கருதுவோர் அதிகமுண்டு. அந்த படிப்பும் அவசியமான, வேலை வாய்ப்பை அள்ளித் தருகிற படிப்பாக, அடுத்த நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் சில அப்டேட்களை தமிழக அரசு செய்துள்ளது.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்பை இளைஞர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ₹2,877.43 கோடி செலவில், 4.0 தரத்தில் பயிற்சி வழங்க தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளது. டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து 10 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உருவாக்கப்பட்டுள்ள இம்மையங்களில் தற்போது உள்ள அட்வான்ஸ் டெக்னாலஜி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்ட் மேனுஃபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆப் திங்ஸ், இன்டஸ்ட்டிரியல் பெயின்டிங், அட்வான்ஸ்ட் பிளம்பிங், அட்வான்ஸ்ட் ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்களில் இல்லாத பல்வேறு புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் தற்போது ஐடிஐக்களில் நிறுவப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஐடிஐ படிப்புக்கு மவுசு குறைந்தநிலையில் பல்வேறு தனியார் ஐடிஐகள் மூடப்பட்டன. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு 4.0 தொழில்நுட்ப மையங்கள் மூலம் இப்படிப்புகளுக்கு புத்துயிர் அளித்து, எண்ணற்ற மாணவர்களை சேர்க்கும் நிலைக்கு முன்னேற்றி உள்ளது. இங்கு தற்போது ஒரு வருட இன்டஸ்டிரியல் ரோபோட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் படிப்பு, இரண்டு வருட மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், பேசிக் ஆப் டிசைனிங் அண்டு விரிச்சுவல் வெரிபையர் மற்றும் அட்வான்ஸ்ட் சிஎன்சி மெசினிங் டெக்னீசியன் ஆகிய படிப்புகள் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது.

ஐடிஐ வரலாற்றில் முதன்முறை…!
காரைக்குடி அரசு ஐடிஐ முதல்வர் குமரேசன் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இந்த 4.0 தொழில்நுட்ப மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளில் கூட இல்லாத வகையில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் இயந்திரங்கள் உள்ளன. பல்வேறு அட்வான்ஸ்ட் இயந்திரங்கள் மற்றும் ஏசி மயமாக்கப்பட்ட நான்கு கம்ப்யூட்டர் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு 184 பேர் பயிற்சி பெறக்கூடிய வகையில் இம்மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ₹750 உதவித்தொகை, மாணவிகளுக்கு ₹1,750 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. தவிர இலவச பஸ் பாஸ், தையற்கூலியுடன் கூடிய சீருடை, சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவி போன்றவை வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு என குறுகியகால மாலை நேர பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

ரோபோ அளிக்குது வெல்டிங் பயிற்சி
ஐடிஐக்களில் கடந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவு பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 4.0 தரத்திலான தொழிற்பிரிவு பயிற்சி பெறுவார்கள். இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது. இம் மையங்களில் ரோபோட் மூலம் வெல்டிங் செய்யப்படும் இயந்திரங்கள், பல்வேறு விதமான மின்சார வாகனங்கள், 3டி பிரிண்டர், அட்வான்ஸ்ட் பெயின்டிங் மிசின், லேசர் கட்டிங் மிசின் மற்றும் பலகோடி மதிப்பிலான மென்பொருட்கள் கொண்டு கம்யூட்டர் லேப் அமைக்கப்பட்டுள்ளது.

The post அதிநவீன வசதிகளுடன் அமைகிறது 4.0 தரத்தில் தொழில்நுட்ப மையம்; ரூ.2,877 கோடியில் அரசு ஐடிஐகள் புத்துயிர் appeared first on Dinakaran.

Tags : Technology Centre ,IDIs ,News ,Tamil ,Nadu ,Chief Chief ,Tamil Nadu ,G.K. ,Stalin ,technology ,
× RELATED வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்