×

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தொழிலாளர் நலவாரியம் அறிவிப்பு

சென்னை: ‘‘தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கு டிச.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’’ என தொழிலாளர் நலவாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிற்சாலைகள், கடைகள், மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு தொழிலாளர் நலநிதி தொகையினை வாரியத்துக்கு செலுத்த வேண்டும். நடப்பு 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அந்தவகையில், தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் Pre-KG முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12,000 வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த உதவி தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் இருக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்கள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிச.31ம் தேதியாகும். எனவே, விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ‘‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு டிச.31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தொழிலாளர் நலவாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Labor Welfare Board ,Chennai ,Labour Welfare Board ,Dinakaran ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...