×

தாமரை தலைவரின் யாத்திரையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தது பற்றி ெசால்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை தலைவரின் யாத்திரை அந்த கட்சியினரிடையே சென்று சேரவில்லையாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை மாநில தலைவர் ‘மவுன்டன்’, தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறாராம். கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்டார். இவர் பெரும்பாலான நேரங்களில் பிரசார வாகனத்தில்தான் சென்றார். பாத யாத்திரை என சொல்லிக்கொண்டு இப்படி வாகனத்தில் செல்கிறாரே..? என மக்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு நடந்துகொண்டார். அந்த அளவுக்கு இவரது பாதயாத்திரை ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. இதைவிட பெரிய காமெடி என்னவென்றால், அரசியல் கட்சி தலைவர்கள் நடைபயணம் மேற்கொண்டால் குறிப்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் கோவையில் நடைபயணம் சென்றபோது, வாகனத்தில் ஏறவே இல்லை. முழுக்க முழுக்க நடந்தே சென்றனர். அத்துடன், கட்சி ெதாண்டர்களுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும் இந்த யாத்திரையில் இணைந்தனர். தலைவர்களுடன் இணைந்து, போட்டிப்போட்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர். ஆனால், அண்ணாமலை பாதயாத்திரைக்கு பொதுமக்கள் மத்தியில் சுத்தமாக வரவேற்பு இல்லை. முழுக்க முழுக்க தாமரை கட்சியினர் மட்டுமே நடந்து சென்றனர். பொதுமக்கள் யாரும் செல்பி எடுக்க முன்வரவில்லை. அதனால், அண்ணாமலை அவருக்கு அவராகவே பலமுறை செல்பி எடுத்துக்கொண்டார். ‘‘இப்படியொரு பாத யாத்திரையை நாங்கள் எங்கள் சர்வீசில் பார்த்ததே இல்லை…’’ என தாமரைக்கட்சி சீனியர்கள் பலரும் புலம்பினர்…’’ என்றார் விக்கியானாந்தா.

‘‘அரசியல் தள்ளாட்டத்தில் உள்ள தேனிக்காரரின் முடிவை தாமரை கட்சி பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாமே, உண்மையா…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் தாமரைக் கட்சியுடனான உறவை நீட்டிப்பதா, முறித்துக் கொள்வதா என்று இன்று அறிவிக்க இருக்கிறார். ஏற்கனவே பலதரப்பட்ட நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு தனித்திருக்கும் இவருக்கு குக்கர் தலைவரின் ஆதரவு கொஞ்சம் தெம்பு தந்தது. இதன் தொடர்ச்சியாக தாமரைக்கட்சியுடன் தொடர்பை நீட்டித்திட ஒரு துண்டு போட்டு வைத்துக் கொள்ளவே, இவரைச் சுற்றிய பலரும் ஆலோசனை சொன்னாங்களாம். தாமரைத் தலைமையை எப்போதும் விமர்சிக்காத நிலையில், இப்போது நாம் மூவ் செய்தால் தாமரையுடன் கூட்டணி கிடைக்கும் என்று நினைக்கிறாராம். ஆனால், தாமரை தரப்போ, தேனிகாரருடன் சேர்வதும் சுயேச்சையுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதும் ஒன்றுதான் என்ற நிலையில் உள்ளதாம். எனினும், சேலம்காரரை விட தாமரைத்தலைமையிடம் தேனிகாரர் மீதே விசுவாசம் கூடுதல் இருக்கிறதாம். அதை குக்கர் தலைவரிடம் தேனிகாரரே சொல்லி இருக்கிறாராம். இப்படி பலதரப்பட்ட ரகசியமான மன ஓட்டத்துடன் கிப்ட் தலைவருடன் தீவிர அரசியல் ஆலோசனை நடத்தி உள்ளாராம். எனினும் கிப்ட் தலைவர் கூட்டணி விஷயத்தில் மதில்மேல் பூனையாக இருக்கிறாராம். எனினும் தேனிகாரரின் வசியத்துக்கு மயங்காமல் பார்த்து சொல்கிறேன்… தமிழ்நாடு பிரச்னையில் மட்டும் தற்போதைக்கு இணைந்து செயல்படுவோம் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். இந்த சம்பவத்தை வைத்து கிப்ட் தரப்பு நாடாளுமன்ற தேர்தல் போன்ற பெரிய தேர்தலில் தேனிகாரருடன் கூட்டணி வைக்க தயாரில்லை என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கிப்ட்டை பற்றி நன்கு தெரிந்தவர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானாந்தா.

‘‘ புதுச்சேரியில் யார் மீண்டும் லைம் லைட்டுக்கு வர்றா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியை முதன்முறையாக கைப்பற்ற தாமரை துடிக்கிறது. ஏற்கனவே அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு, நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தில் தாமரை தன்னிச்சையாக நடந்து கொண்டது. இது புல்லட்சாமிக்கு எரிச்சலை தந்தாலும், முதல்வர் நாற்காலிக்கு பாதிப்பில்லை என்பதால், போனால் போகட்டும் என விட்டுவிட்டார். அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் தாமரை புதுச்சேரி தொகுதியை கைப்பற்ற நினைக்கிறது. இதனை தாமரை தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி வர்றாங்க.

இதில் புல்லட்சாமியும், தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் புல்லட்சாமிக்கு தாமரைக்கு தொகுதியை தாரை வார்ப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என நினைத்துக்கொண்டு, தாமரை தரப்பு தேர்தல் வேலைகளை துவங்கிவிட்டது. இதற்கிடையே என். ஆர் காங்கிரசில் ஏற்கனவே எம்பியாக நின்று நாடாளுமன்றம் சென்ற ராதாவுக்கு எம்பி ஆசை துளிர்த்துள்ளதாம். சமீபகாலமாக எங்கும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காத ராதா, திடீரென அரசியல் களத்துக்கு வந்திருக்கிறாராம். புல்லட்சாமியை சந்தித்து, தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினாராம். இது தொடர்பக 3 மணி நேரம் இருவரும் ஆலோசித்திருக்கின்றனர். இன்னும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தாமரை தலைமை எதுவும் தன்னிடம் பேசவில்லை. பேசும்போது கேட்டு பார்ப்போம் எனக்கூறி ராதாவை ஹோல்டிங்கில் புல்லட்சாமி வைத்திருக்கிறாராம். அதே நேரத்தில் தாமரை தரப்பும் வேட்பாளரை வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள். ப விட்டமின் கொண்ட வேட்பாளர்கள் நிறைய பேர் இருந்தாலும், மக்களுக்கு நன்கு தெரிந்த முகம் என்ற வகையில் யாரும் இல்லாதது பின்னடைவை சந்திக்கிறதாம். இப்படிப்பட்ட சூழலில் என். ஆர் காங்கிரசுக்கு கடைசி நேரத்தில் தாமரை சீட் கொடுக்காவிட்டாலும், தாமரையின் வேட்பாளாராக ராதாவை களமிறக்க புல்லட்சாமி சிபாரிசு செய்ய வாய்ப்பிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை தலைவரின் யாத்திரையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தது பற்றி ெசால்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,wiki Yananda ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...