×

கிரிக்கெட்டில் வரலாறு படைத்த நேபாளம்

முதல் முறையாக ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய மங்கோலிய அணியை புரட்டி எடுத்த நேபாளம் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. ஹாங்சோவில் நேற்று ஆண்கள் டி20 தொடங்கியது. இந்தியா உள்ளிட்ட முன்னணி அணிகள் நேரடியாக காலிறுதியில் விளையாட உள்ளன. மற்ற அணிகள் லீக் சுற்றில் களம் காணுகின்றன. ஏ பிரிவு முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம்-மங்கோலியா மோதின.

டாஸ் வென்ற மங்கோலியா பந்துவீச… நேபாளம் 20 ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தது. சர்வதேச டி20ல் இது அதிகபட்ச சாதனை ஸ்கோராக அமைந்தது. புர்டெல் 19, ஆசிப் 16, கேப்டன் ரோகித் பவுடல் 61 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். குஷால் மல்லா 137 ரன் (50 பந்து, 8 பவுண்டரி, 12 சிக்சர்), திபேந்திர சிங் 52 ரன் (10பந்து, 8 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். 315 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட கத்துக்குட்டி அணியான மங்கோலியா 13.1 ஓவரில் 41 ரன்னுக்கு ஆல் அவுட்டாக (5 பேர் டக் அவுட்), நேபாளம் 273 ரன் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றி பெற்றது. 2019ல் செக் குடியரசு 257 ரன் வித்தியாசத்தில் துருக்கியை வீழ்த்தி படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது.

* சர்வதேச டி20ல் ஒரு அணி 300 ரன்னை கடப்பது இது முதல் முறையாகும். முந்தைய அதிகபட்சம்: ஆப்கானிஸ்தான் 2019ல் அயர்லாந்துக்கு எதிராக 278/3.
* நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் விளாசி யுவராஜ் சிங் சாதனையை தகர்த்தார் (12 பந்து, 2007ல் இங்கிலாந்துக்கு எதிராக).
* குஷால் மல்லா 34 பந்தில் சதம் விளாசி தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் (2017), இந்தியாவின் ரோகித் ஷர்மா (2017), செக் குடியரசு வீரர் விக்ரம்சேகரா (2019) ஆகியோரது சாதனையை (தலா 35 பந்தில் சதம்) நொறுக்கினார்.
* சர்வதேச டி20ல் அதிகபட்ச ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் குஷால் மல்லா (137*) 5வது இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஆஸி.யின் ஆரோன் பிஞ்ச் (172 ரன், 2018) உள்ளார்.

The post கிரிக்கெட்டில் வரலாறு படைத்த நேபாளம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...