×

கொலையானவராக கூறப்பட்ட நபர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவியாக இருக்குமோ என்று கால்களை பார்த்து நீதிபதி ஆய்வு: போலீசாருக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நந்த கிஷோர் சந்தக் என்பவர், தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஏழுகிணறு போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நந்த கிஷோர் சந்தக்கின் உறவினரான கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் கொலை மிரட்டல் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, மூன்றாவது முறையாக பிரிவில் மாற்றம் செய்து கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நந்த கிஷோர் சந்தக் தனது சித்தப்பா. தங்களுக்கிடையே குடும்ப சொத்து பிரச்னைகள் காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டது. தற்போது இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராதேஷ் தரப்பு வழக்கறிஞர், நந்த கிஷோர் சந்தக் கொல்லப்படவில்லை. அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என்று நந்த கிஷோர் சந்தை நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினார். அவரை பார்த்த நீதிபதி, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இங்கு உள்ள நிலையில் பின்னர் எப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நந்த கிஷோர் சந்தை பார்த்து ஆவியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ‘‘கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்துக் கொள்கிறேன்’’ என்று நகைச்சுவையாக கூறினார். இதனால் நீதிமன்ற அறையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதையடுத்து, ராதேஷிடம் வழக்கு குறித்து விசாரித்து சமரசம் செய்யப்பட்டதை நீதிபதி உறுதி செய்தார். இதை தொடர்ந்து நீதிபதி, இது போன்ற செயல்கள் காவல்துறையை கேலிக்குள்ளாக்கும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி, உயிரோடு இருப்பவரை கொலை செய்யப்பட்டவராக சித்தரித்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. இயந்திரத்தனமாக இதுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டு விசாரிக்கப்படுவது நீதிமன்ற நடவடிக்கைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாழ்படுத்திவிடும். இந்த வழக்கில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் செயல் ஏற்க கூடியதல்ல. இந்த வழக்கில் ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டார்.

The post கொலையானவராக கூறப்பட்ட நபர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவியாக இருக்குமோ என்று கால்களை பார்த்து நீதிபதி ஆய்வு: போலீசாருக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Nanda Kishore Chandak ,Chaugarpettai, Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...