×

குறளின் குறள்: வாழ்தலினும் பெரிது!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவள்ளுவர் தற்கொலையை ஊக்குவிக்கவில்லை. ஆனால், உயிரைவிட மானம் பெரிது என்கிறார். மானத்திற்கு ஊறு நேருமானால் உயிரை விட்டு விடுவதேகூட, மேலானதாக இருக்கும் எனச் சொல்லி மானத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறார். மானம் அழிய நேர்ந்தபோது, உயிர்துறந்த நிகழ்வுகள் சில, இலக்கியத்திலும் வரலாற்றிலும் பதிவாகியுள்ளதைப் பார்க்கிறோம். தொட்டதற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும் கோழைத்தனம் அல்ல அது. அதை உயிர்த் தியாகம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
(குறள் எண் 969)

மயிர் நீத்தால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர்கள் சான்றோர். அவர்கள் தங்கள் மானத்திற்குக் கேடு வருமாயின் அதைத் தாங்கிக் கொண்டு உயிர்வாழ மாட்டார்கள். உயிரை விட்டுவிடுவார்கள்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு.
(குறள் எண் 970)

தமக்கு இழிவு ஏற்பட்டால் உயிர்வாழ விரும்பாத மானம் உடையவர்கள் சான்றோர். அவர்களின் புகழை உலகத்தவர் போற்றிப் பாராட்டுவர்.

ஒட்டார்பின் சென்றொருவன்வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(குறள் எண் 967)

தம்மை மதித்துத் தம்மோடு சேர்த்துக் கொள்ளாதவர், பின்னால் சென்று பணிந்து உயிர் வாழ்வதைக் காட்டிலும், தான் நின்ற நிலையிலேயே மானத்தோடு உயிர்விட்டான் என்று புகழப்படுதல்தான் சிறந்தது.

மருந்தோ மற்றுஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

(குறள் எண் 968)

சாகாமலே நிரந்தரமாய் இருக்க மருந்து கிடையாது. அனைவரும் எப்படியும் ஒருநாள் சாகத்தான் வேண்டும். அப்படியிருக்க, மானம் கெடும் நிலை வருமானால் உடம்பைக் காத்து உயிர்வாழ்வது பெருமையுடையது அன்று.ராமாயணத்தில், தசரதனின் பெற்றோர் அஜனும் இந்துமதியும். தசரதன் சிறுவனாக இருக்கும்போதே இந்துமதி மாண்டுபோகிறாள். அஜன் மீளாத் துயரில் ஆழ்கிறான். தன் குழந்தை தசரதனைத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்க்கிறான்.

தசரதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் காலம் வரும்வரை காத்திருந்து, அவன் தலையில் முடிசூட்டி அவனை அரசனாக்கிய பின்னர், மனைவி இறந்ததால் விளைந்த பல்லாண்டுத் துயர் தாங்காமல், சரயூ நதியில் இறங்கித் தற்கொலை செய்து கொள்கிறான். இது நிறைவேறிய தற்கொலை. இதுதவிர, நிறைவேறாத இரண்டு தற்கொலை முயற்சிகள் ராமாயணத்தில் வருகின்றன. இரண்டிலும், சம்பந்தப் பட்டவர்கள் இறுதிக் கணத்தில் காப்பாற்றப்பட்டுவிடுகிறார்கள்.

சுந்தர காண்டத்தில் சீதை, `போதுலா மாதவிப் பொதும்பர்’ எய்தித் தற்கொலைக்கு முயன்றதாகக் கம்பர் எழுதுகிறார். `உயிர் நீப்பர் மானம் வரின்’ என்கிறாரே வள்ளுவர்? எங்கே ராவணனால் தன் மானம் போய்விடுமோ.. என அஞ்சுகிறாள் சீதை. அதனாலேயே உயிர்விட முடிவெடுக்கிறாள். ஆனால், சரியான நேரத்தில் அனுமன் தாவி வந்து ராமநாமத்தைச் சொல்லி, சீதையின் உயிரைக் காக்கிறான். சீதை மனத்தில் நம்பிக்கை துளிர்விடுகிறது.

`அரக்கனே ஆக வேறோர் அமரனே
ஆக அன்றிக்
குரக்கினத் தொருவனேதான் ஆகுக
கொடுமை ஆக
இரக்கமே ஆக வந்திங் கெம்பிரான்
நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத் தந்தான்
உயிர்க்கிதின்
உதவி உண்டோ?’

என அனுமனை மனத்தில் வாழ்த்துகிறாள் சீதாதேவி. அதுபோலவே, பரதன் உயிர்விடத் துணிந்த தருணம் ஒன்று ராமாயணத்தில் வருகிறது. வனவாசத்தின் பதினான்கு ஆண்டுக் காலம் முடிவடையப்போகிறது. ஆனால், ராமபிரான் இன்னும் அயோத்தி வந்து சேரவில்லை. பதறுகிறது பரதன் உள்ளம். அரசாட்சியை சத்துருக்கனனிடம் கொடுத்துவிட்டு தீப்பாய்ந்து உயிர்விட முடிவெடுக்கிறான். `இரு சகோதரர்கள் வனவாசம் செல்ல, ஒரு சகோதரன் உயிர்விட எண்ண, நான் மட்டும் இந்த அரசை ஆளவேண்டுமா?’ எனச் சலித்துக் கொள்கிறது சத்துருக்கனன் மனம்.

`கானாள நிலமகளைக் கைவிட்டுப்
போனானைக்
காத்துப் பின்பு
போனானும் ஒருதம்பி, போனவர்கள்
வருமவதி
போயிற் றென்னா
ஆனாத உயிர்விடவென் றமைவானும்
ஒருதம்பி
அயலே நாணாது
யானாமிவ் வரசாள்வன் என்னே இவ்வர
சாட்சி
இனிதே அம்மா!’

அங்கும் தக்க நேரத்தில் அனுமன் தாவி வந்து ராமன் வரும் சேதியைச் சொல்லி, பரதனின் தற்கொலை முயற்சியைத் தடுப்பதைப் பார்க்கிறோம். ராமாயணத்தில் உத்தரகாண்டப் பகுதி, ராமனிடம் புதல்வர்களான லவ குசர்களை ஒப்படைத்த பின்னர், சீதாதேவி நிலத்திற்குள் புகுந்து மறைந்ததைச் சொல்கிறது. ராமாயண இறுதிப் பகுதியில் லட்சுமணன் தற்கொலை செய்துகொண்டு மடிந்ததையும், அதன் பின்னர் ராமன், பரதன், சத்துருக்கனன் ஆகியோர் சரயூ நதியில் இறங்கி உயிர் நீத்ததையும் ராமகதை பேசுகிறது. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்திலும் சில மரணங்கள் பற்றி செய்திகள் சொல்லப் படுகின்றன. கோவலன் கொலையுண்டபின் பாண்டிய மன்னன் அரசவைக்கு வருகிறாள்.

பத்தினித் தெய்வமான கண்ணகி, தன் காற்சிலம்பை உடைத்து கோவலன் நிரபராதி என நிரூபிக்கிறாள். தான் தவறாய்த் தீர்ப்பு வழங்கியதை உணர்ந்த பாண்டிய மன்னன், வளைந்த செங்கோலைத் தன்னுயிர் கொண்டு நிமிர்த்துவதைப் போல், உயிர்நீத்து விடுகிறான். அவனைத் தொடர்ந்து, அவன் மனைவியும் உயிர் துறக்கிறாள். அவை இரண்டும் அதிர்ச்சியால் விளைந்த மரணங்கள். அவர்களின் மரணங்கள் முயன்று ஏற்படுத்திக் கொண்டவை அல்ல. முயலாமலே இயல்பாக நேர்ந்தவை.

வடக்கிருத்தல் என்றே ஒரு தமிழ்மரபு இருக்கிறது. கோப்பெருஞ்சோழன், தன் பிள்ளைகளே தனக்கு எதிரிகளாக மாறியதால், வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தான். இவ்விவரம் அறிந்தால், தான் இதுவரை பாராமலே நட்புக்கொண்டிருக்கும் பிசிராந்தையார் கட்டாயம் வந்து, தம்முடன் வடக்கிருந்து உயிர் நீப்பார் என அவன் திட சித்தத்துடன் கூறுகிறான். மன்னன் சொன்னபடியே அவனுடன் வடக்கிருந்து உயிர்துறக்கும் எண்ணத்தில் எங்கிருந்தோ பிசிராந்தையாரும் வந்து சேர்கிறார். அதைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்கிறது பொத்தியார் என்ற புலவரின் மனம்.

`வருவான் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும்
வியப்பிறந்தன்றே!’

என அவர் பாடல் பாடி வியக்கிறார்.

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வடக்கிருந்து உயிர் நீத்ததும் பொத்தியாரும் மனம் பொறுக்காமல், வடக்கிருந்து உயிர் நீத்ததாகச் சொல்கிறது சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு. வடக்கிருந்து உயிர்நீத்த இன்னொரு மன்னனையும் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகின்றது. சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும், கரிகால் சோழனுக்கும் `வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் போர் நடைபெறுகிறது. கரிகால் வளவன் வேலெறிய அது பெருஞ்சேரலாதன் மார்பைத் துளைத்து அவன் முதுகிலும் புண் ஏற்படுத்துகிறது. முதுகிலும் புண் ஏற்பட்டதால், அவன் நாணம் கொண்டு வடக்கிருந்து உயிர்துறந்தான் என்கிறது புறநானூறு.

கழாஅத் தலையார் என்ற புலவர், சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். இவர்களெல்லாம் வள்ளுவர் சொல்லும் `மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்’ போன்றவர்கள். இவர்களின் உயிர்த் தியாகத்தைத் தற்கொலை என்ற அளவில் நாம் குறுக்கிவிட இயலாது. கபிலரும் பாரியும் நண்பர்களாக இருந்தார்கள். பாரி காலமான பிறகு, அவன் புதல்வியருக்குத் திருமணம் முடித்து வைக்கிறார் புலனழுக்கற்ற அந்தணாளரான கபிலர்.

அதன்பின், தம் கடமையை முடித்த நிறைவோடு அவர் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்ற செய்தியும் நமக்குப் புறநானூற்றின் வழியே கிடைக்கிறது. உயிர் விடுவதன் பொருட்டு `சல்லேகனை’ என்ற ஒரு நோன்பைச் சமணர்கள் மேற்கொள்வார்கள். தருப்பைப் புல்லின்மேல் வடக்குத் திசை நோக்கி அமர்ந்து இறக்கும் வரையில் உணவு உட்கொள்ளாமல் இருந்து உயிர்விடும் முறையே சல்லேகனை.

இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை
வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை
என்கிறது அருங்கலச் செப்பு என்னும் சமணநூல்.

பிறரால் ஏற்படும் தாங்க முடியாத தொல்லை, தீராத கொடிய நோய், மிகுந்த மூப்பு ஆகியவை வரும் காலத்தில் `சல்லேகனை’ நோன்பின் மூலம் உயிரைத் துறக்கலாம் என்கிறது இந்த நூல்.
சல்லேகனையைக் கொச்சைப் படுத்தலாகாது என்றும், அது எத்தகைய பலனையும் எதிர்பாராது தருமத்தின் வழியில் உயிரைத் துறக்கும் உயர்ந்த முறை என்றும் நீலகேசி என்ற சமணநூல் தெரிவிக்கிறது.

சமணத் துறவியான சிலப்பதிகாரக் கவுந்தி அடிகள், சல்லேகனை விரதம் மூலம் உயிர் நீத்தவர்தான். கண்ணகியும் கோவலனும் மதுரை செல்ல வழிகாட்டியாக இருந்தவர் அவர். கண்ணகி வாழ்வில் விதியின் பயனாய் நேர்ந்த எண்ணற்ற துன்பங்களை அறிகிறார். கண்ணகியைத் தன் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்க விழைந்த மாதரி, கண்ணகி வானுலகம் சென்றபின், தானும் தீப்பாய்ந்து உயிர் துறந்ததையும் அறிகிறார். இவை அனைத்தையும் அறிந்ததும், சமண முனிவரான கவுந்தி அடிகள் `சல்லேகனை’ என்ற உண்ணா விரதத்தின் மூலம் தாமும் உயிர் துறக்கிறார் என்கிறது சிலப்பதிகாரம்.

பூமிதான இயக்கத்தின் தந்தையும், காந்தியின் சீடரும், காந்தியால் பெரிதும் மதிக்கப் பட்டவருமான வினோபா பாவே, தம் எண்பத்தேழாம் வயதில், வாழ்ந்தது போதும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததை அண்மைக் கால வரலாறு பதிவு செய்துள்ளது. இன்று பல மாணவர்கள் கல்வியில் விளையும் ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்வதைக் கேள்விப் படுகிறோம்.

மாணவர்கள் மனத்தில் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டிய கல்வி, எப்படி வாழ்வை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனத்தை விதைத்தது என்பதே ஆச்சரியம். வள்ளுவர் தற்கொலை செய்துகொள்வதை ஊக்குவிக்கவில்லை. மானமழிந்த பின் உயிர்வாழ வேண்டுமா எனக் கேட்டு, மானத்தின் பெருமையையே அந்தக் கேள்வியின் மூலம் உணர்த்துகிறார்.

பொதுவாக இசை, மனத்தை மென்மைப் படுத்தும் என்று சொல்வதுண்டு. ஆனால், அண்மைக் கால வரலாற்றில் ஒரே ஒரு பாடல் பலரிடம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டி அவர்கள் உயிரை வாங்கியுள்ளது. `க்ளூமி சன்டே’ என அழைக்கப்படும் அந்தப் பாடலைக் கேட்டவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதால், பல நாடுகளில் வானொலியில் அந்தப் பாடலை ஒலிபரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஹங்கேரியாவில் எழுதி இசையமைக்கப் பட்ட இந்தப் பாடல், ஹங்கேரியத் தற்கொலைப் பாடல் என்றே வழங்கப்படுகிறது. கல்வியில் தோல்வி, வணிகத்தில் தோல்வி, காதலில் தோல்வி போன்றவையெல்லாம் உயிரின் மதிப்பின்முன் அற்பக் காரணங்களே.இதைத்தான் கற்க வேண்டும் என எண்ணாமல், எதை வேண்டுமானாலும் கற்று முன்னேறலாம். தோல்வியுற்ற வணிகத்திலேயே பின் பெரிய வெற்றியையும் சந்திக்கலாம்.

குறிப்பிட்ட வயதில் தோன்றும் காதல் என்ற தற்காலிக உணர்வு பெரிதும் மிகைப்படுத்தப்படுவதால், அந்தத் தோல்வியைத் தாங்கும் மனவலிமையை இளைஞர்கள் இழக்கிறார்கள். மனிதர்களைக் காதலிப்பதை விடவும், அவரவர் துறையைக் காதலித்தால் அந்தந்தத் துறைகளில் முயன்று பெரிய பெரிய சாதனைகளைச் செய்யமுடியும்.

தற்கொலை என்பது தவறுதான். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்வதே தேவையானது. மானம் இழந்தபின் உயிர்வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுவதே மேல் எனத் திருவள்ளுவர் சொல்வது, மானத்தின் சிறப்பை உணர்த்தவே அல்லாது தற்கொலை எண்ணத்தை ஊக்குவிக்க அல்ல. எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதையே வள்ளுவம் நூல் நெடுகப் பேசி வாழ்வியலைக் கற்பிக்கிறது. வாழ்வதும் முக்கியம், வாழ்க்கையில் மானத்தோடு வாழ்வது அதனினும் முக்கியம் என்பதே வள்ளுவம் கற்பிக்கும் வாழ்வியல்நெறி.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post குறளின் குறள்: வாழ்தலினும் பெரிது! appeared first on Dinakaran.

Tags : Kumumam Spirit Thiruvalluvar ,
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி