×

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்பு தானம் முதல்வரின்ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு பறந்த இதயம்

*வெற்றிகரமாக மற்றொருவருக்கு பொருத்தம்

திருமலை : குண்டூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. குண்டூரில் இருந்து முதல்வர் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு இதயம் வாலிபருக்கு பொருத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கலூரிப்பேட்டையைச் சேர்ந்தவர் கட்டா கிருஷ்ணா(18). இவர் குண்டூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், கிருஷ்ணாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கிருஷ்ணாவின் கல்லீரல் விசாகப்பட்டினத்திற்கும், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இதேபோன்று இதயம் திருப்பதியில் உள்ள நோயாளிக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். சாலை மார்க்கமாக இதயம் கொண்டு சென்றால் கால நேரம் விரயமாகும் என மருத்துவ குழுவினர் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்த தகவல் முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக முதல்வர் ஜெகன்மோகன் தான் பயன்படுத்தும் ஹெலிகாப்டரை கொண்டு செல்ல உத்தரவிட்டார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணாவின் இதயம் குண்டூரில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இதயம் கர்னூல் மாவட்டம், கொத்தபேட்டாவைச் சேர்ந்த 33 வயது வாலிபருக்கு திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மருத்துவமனையில் வைத்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது.

முன்னதாக ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து போலீசார் பசுமை வழிச்சாலை அமைத்து போக்குவரத்து பாதிக்காத வகையில் முன் ஏற்பாடுகள் செய்தனர்.
இதனால் குண்டூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த இதயத்தை டாக்டர்கள் குழுவினரின் தயார் நிலையில் இருந்து பெற்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மற்றொரு வாலிபருக்கு பொருத்தினர். உரிய நேரத்தில் இதயம் கொண்டு வர முதல்வர் ஜெகன் மோகன் தான் பயன்படுத்தும் ஹெலிகாப்டரை அனுப்பியதற்கு வாலிபரின் குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்பு தானம் முதல்வரின்ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு பறந்த இதயம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Gundur ,Guntur ,
× RELATED திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரமான...