×

விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை கோரி கூடலூரில் உண்ணாவிரத போராட்டம்

கூடலூர் : நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூர் காந்தி திடலில் சிறு தேயிலை விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் சலிவயல் சாஜி தலைமை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வேளாண்மைத்துறை, எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 33.75 வழங்க வேண்டும். கோரிக்கையின் படி ஆதார விலை வழங்கும் வரை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் ஐந்து மானியமாக வழங்க வேண்டும்.நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களும் மானிய உதவிகளும் எவ்வித பாரபட்சமும் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேயிலை வாரியம் மற்றும் தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு வழங்கி வந்த அரசு உதவிகளை வழங்குவதற்கு இடையூறாக உள்ள வனத்துறை தடையை திரும்ப பெற வேண்டும். தேயிலை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் பயன்படுத்தி வரும் இடுபொருட்களுக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும். தேயிலைத்தூளுக்கு அடிப்படை ஆதார விலை ரூ.150 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தில், சாலீஸ்பரி இன் கோ உறுப்பினர் சங்க தலைவர் கணபதி, செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் வெங்கடேஷ், பெஸ்டா கூட்டமைப்பு செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் முருகன் மாஸ்டர், துணை தலைவர்கள் ஆனந்தராஜா, மனோகரன், மத்திய சங்க உறுப்பினர் ஊட்டி ராஜ நாகம், ஊட்டி நிலக்கோலு விவசாயிகள் சங்கத்தலைவர் தர்மன், நிர்வாகி இராமன் மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், முன்னாள் செயலாளர் சகாதேவன், நாம் தமிழர் கேதீஸ்வரன், காங்கிரஸ் இபினு, பாஜக ரவி, சிபிஎம் வாசு, சாலீஸ்பரி உறுப்பினர்கள் சங்க ஆலோசகர் மஞ்சமூலை சுப்பிரமணி, எஸ்டிபிஐ நகர தலைவர் பெரேஸ்கான், வணிகர் சங்க தலைவர் அப்துல் ரசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை கோரி கூடலூரில் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Federation of Farmers' Unions ,Nilgiris ,
× RELATED கம்பம்மெட்டு சாலையில் சீரமைப்பு பணி துவங்கியது