×

விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

*அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம் *மாற்று இடம் வழங்க எம்எல்ஏ உறுதி

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனிடையே எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மறியலில் ஈடுபட திரண்டு வந்த நிலையில் அவ்வழியாக சென்ற எம்எல்ஏ, அதிகாரிகள் மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் கலைந்து சென்றனர்.

தமிழகத்தில் நீர், நிலை ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏரி, குளம், வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை அகற்றி வருகின்றனர். இதனிடையே விழுப்புரம் நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வி.மருதூர் ஏரி சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சின்னப்பா நகர், மணிநகர், இந்திராநகர், ராஜூவ்காந்தி நகர், பெருமாள் நகர், காளியம்மன் நகர், பிள்ளையார்கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 390 பேர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்பினால் மருதூர் ஏரியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி வந்தன.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 10க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டு தலங்களை அகற்றினர். இந்நிலையில் சிலமாத இடைவெளிக்குப்பிறகு நேற்று மீண்டும் விடுபட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை அகற்றினர். அப்போது சில பெண்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபடுவதற்காகவும் முயன்றனர். அப்போது அவ்வழியாக அதிகாரிகள், எம்எல்ஏ அரசு நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் அவர்களிடம் முறையிட திரண்டு வந்தனர்.

அவர்களை பார்த்து கீழே இறங்கிய லட்சுமணன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளிடம் எங்களுக்கு குடியிருக்க இடமில்லை. அதுவரை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றுவதை நிறுத்த வேண்டுமென தெரிவித்தனர். அப்போது எம்எல்ஏ, அதிகாரிகள் குடியிருப்பதற்கான மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளித்தபிறகு அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சின்னப்பாநகரில் உள்ள 5 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Vilapuram ,MLA ,Viluppuram ,Dinakaran ,
× RELATED செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில்...