×

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வரை கர்நாடகா அவமதிப்பதா?.. சீமான் கடும் கண்டனம்

தஞ்சாவூர்: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா, தமிழ்நாடு முதல்வரை அவமதிப்பதை ஏற்க முடியாது என்று சீமான் தெரிவித்தார். தஞ்சாவூரில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: அ.தி.மு.க., பா.ஜ., பிரிவை நான் விரிசலாக, தற்காலிகமானதாக பார்க்கவில்லை. நிரந்தர முறிவாக பார்க்கிறேன். அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது குறித்து பாஜ டெல்லி தலைமைதான் கருத்து தெரிவிக்கும் என்று அண்ணாமலை இப்போது சொல்கிறார். அவர் இதுவரை பேசியது எல்லாம் தலைமையிடம் அனுமதி கேட்டுத்தான் பேசினாரா?.

காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு செய்கிறார்கள். திமுக மீது எனக்கு கருத்து, கொள்கை முரண் இருப்பது வேறு. ஆனால், தமிழ் மண்ணின் முதல்வரை அவமதிப்பது எங்களுக்கு தன்மான இலக்காக தெரிகிறது. எங்களுக்கு கோபம் வருகிறது. முதல்வரை அவமதித்த ஒருவர் மீதாவது கர்நாடகாவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? உயிரை காக்கும் மருத்துவம் தரமில்லை. மருத்துவ படிப்பில் முதுநிலைக்கு மட்டுமல்லாமல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் நீட் தேர்வை ஜீரோவாக ஆக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒன்றிய அரசுக்கு தெரிந்து விட்டது. நீட் தேர்வு தரமான மருத்துவரை உருவாக்காது.

பெண்கள் இட ஒதுக்கீடு என கூறிய நிலையில், நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வந்தனர். ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆதிவாசி, விதவை, கருப்பாக இருக்கிறார் போன்ற காரணங்களுக்காக அழைக்கவில்லை. இதுபோலத்தான் அம்பேத்கரை பள்ளியில் தீண்டாமையால் கோணிப்பையை விரித்து போட்டு அமர வைத்தனர். ஆனால் அவர்தான் கோணிப்பையில் சட்டகோப்புகளை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

The post காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வரை கர்நாடகா அவமதிப்பதா?.. சீமான் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,CM ,Caviri Water ,Seaman ,Thanjavur ,Caviri ,Seeman ,Namthamilar ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...