×

வாலாஜாபாத்தில் ஆபத்தான நிலையில் நூலக கட்டிடம்: சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் உள்ள நூலகம் கட்டிடம் சேதமடைந்துள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் கசிந்து புத்தகங்கள் வீணாகி வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நூலகத்தினை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், வங்கிகள், நூலகம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலக அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், வாலாஜாபாத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சிறுவர் நூலகம் செயல்பட்டு வருகிறது. இது, கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், 25 ஆயிரம் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கான நூல்கள், அரசு பணிகளுக்கு தேர்வு எழுதும் இளைஞர்களுக்கான புத்தகங்களும் உள்ளன. இதனால், இந்த நூலகத்திற்கு, நாள்தோறும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்த நூலகம் சாலையையொட்டி அமைந்துள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் சத்தங்களால் இங்கு படிக்க முடியாத சூழல் நிலவுவதாக வாசகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாலாஜாபாதை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுவதும் சிறு, சிறு நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்கள் அனைத்தும் போதிய நூல்கள் இன்றியும் காணப்படுவதால் வாலாஜாபாத்தில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் அரசு பணிகளுக்காக தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கிறோம். நாளிதழ் படிக்கும் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த முதியோர்கள் முதல் சிறுவர்கள் வரை இங்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் இந்த நூலகத்தில் ஏதுமில்லை. அதனால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, இந்த சிறுவர் நூலகத்தை தரம் உயர்த்தித்தர வேண்டும்’ என்றனர்.

*மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீண்
மழை காலத்தில் மேற்கூறை வழியாகவும், சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாகவம் தண்ணீர் கசிந்து புத்தகம், நாளிதழ்கள் நனைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், புத்தங்களை பிரித்து படிக்க முடியாதநிலையும் காணப்படுகின்றது. மேலும், வாசகர்கள் அமர்ந்து படிக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. ஆபத்தான முறையில் நூல்களை வாசிக்க வேண்டிய சூழல் இங்கு நிலவுகின்றது. ஆபத்தானநிலையில் காணப்படும் தளத்தின் கீழ் அமர்ந்து படிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது.

*கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்
நூலகம் என்றால் அமைதி நிலவும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்குள்ள நூலகம் தற்போது சத்தங்களாகவும், அச்சத்துடனும் நூல்கள் வாசிக்க வேண்டிய உள்ளது. இந்த நூலகத்தினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நூல்கள் வாசிக்கும் பழக்கம் கொண்ட வாசகர்களுக்காகவும், வரும் எதிர்கால இளைஞர்கள் கையில் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், நூலக கட்டிடத்தினை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் வலியுறுத்துகின்றன.

The post வாலாஜாபாத்தில் ஆபத்தான நிலையில் நூலக கட்டிடம்: சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Wallajabad ,Dinakaran ,
× RELATED உள்ளாவூர் ஊராட்சியில் கால்நடைகள்...