×

41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம்: இந்தியா அபார சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் குதிரையேற்ற குழு டிரெஸ்ஸேஜ் பிரிவில், இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. அனுஷ் அகர்வாலா, ஹ்ரிதய் விபுல், திவ்யாக்ரிதி, சுதிப்தி ஹஜேலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 209.205 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடித்தது. இந்த போட்டியில் சீனா 204.882 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஹாங்காங் (சீனா) 204.852 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றன. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டியின் குதிரையேற்ற போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஹாங்சோ தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம் இது.

நேஹாவுக்கு வெள்ளி: பாய்மரப் படகு போட்டியின் மகளிர் டிங்கி ஐஎல்சிஏ-4 பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை நேஹா தாகூர் (17 வயது), 2வது இடம் பிடித்து (நெட்:27 புள்ளி) வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். தாய்லாந்தின் நோப்பஸார்ன் குன்பூஞ்சன் (28 புள்ளி) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

* ஆண்கள் பாய்மரப் படகு போட்டியின் ஆர்எஸ்: X பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் எபாத் அலி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
* ஆண்கள் வாலிபால் போட்டியில் இந்திய அணிக்கு 6வது இடமே கிடைத்தது. 5வது இடத்துக்காக பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 21-25, 20-25, 23-25 என்ற நேர் செட்களில் போராடி தோற்றது.
* ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். 3வது சுற்றில் கஜகஸ்தானின் பெய்பிட் ஸுகயேவுடன் நேற்று மோதிய சுமித் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
* கலப்பு இரட்டையர் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா – யுகி பாம்ப்ரி இணை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் பாகிஸ்தானின் சாரா இப்ராகிம் – அகீல் கான் ஜோடியை மிக எளிதாக வீழ்த்தியது.

The post 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம்: இந்தியா அபார சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Hangzhou ,Equestrian Team Dressage ,Asian Games ,
× RELATED ஆஷஸ் தொடர்; 4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி!