×

கூட்டுறவு வங்கியில் ₹300 கோடி மோசடி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் ₹300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்பட்ட புகாரில் வடக்காஞ்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் அரவிந்தாக்ஷன் உள்பட 2 பேரை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் கருவன்னூரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வங்கியில் ₹300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசும், பின்னர் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. இதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பல கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த பினராயி விஜயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும், தற்போதைய எம்எல்ஏவுமான மொய்தீன், வடக்காஞ்சேரி நகரசபை மார்க்சிஸ்ட் கவுன்சிலர் அரவிந்தாக்ஷன் உள்பட கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடத்தியபோது அமலாக்கத் துறையினர் தன்னை தாக்கியதாக அரவிந்தாக்ஷன் போலீசில் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று திடீரென அமலாக்கத்துறையினர் அரவிந்தாக்ஷனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும் கருவன்னூர் வங்கியில் அக்கவுண்டென்ட்டாக இருந்த ஜில்ஸ் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் பின்னர் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரவிந்தாக்ஷன் முன்னாள் அமைச்சர் மொய்தீனின் பினாமி என்று கூறப்படுகிறது. இதனால் மொய்தீனும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கூட்டுறவு வங்கியில் ₹300 கோடி மோசடி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Vadakancheri ,Marxist ,Karvannoor Cooperative Bank ,Thrissur ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...