×

பால் சொசைட்டியில் ₹8 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை

*குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பால் சொசைட்டியில் ₹8 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 372 மனுக்கள் அளிக்கப்பட்டன.

வாலாஜா அடுத்த தகரகுப்பம் கிராமமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவர், அவரது உறவினர்களுக்கு சார்பாக நடந்து கொண்டு தேவையில்லாத பிரச்னை ஏற்படுத்துகிறார். அரசு புறம்போக்கு இடங்களை அவரது உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது ஊராட்சிக்கு மகளிர் சுய உதவி குழுவிற்காக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த கட்டிடத்தை நல்ல இடத்தில் கட்டாமல் செங்காடு ஏரிக்கு செல்லும் ஓடையோரம் கட்ட முயற்சிக்கிறார். இந்த இடத்தில் கட்டினால் அரிப்பால் கட்டிடம் விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதனால், அரசாங்கத்திற்கு பல லட்ச ரூபாய் இழப்பும், விவசாயிகளுக்கு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஓடையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சி செய்யும் பஞ்சாயத்து தலைவரின் செயலை தடுக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

வாலாஜா அடுத்த கொண்டகுப்பம் கிராமமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் ஆவின் பால் நிறுவனத்திற்கு சொந்தமான பால் சொசைட்டி நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தில் மோகன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் சரிவர கணக்குகளை நிறுவனத்தில் கணக்கு காட்டாமல் ₹8 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து நாங்கள் புகார் செய்தும் இதுவரை அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்து பால் ஊற்றிய நபர்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தில் டிஆர்ஓ சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் வள்ளி, நேர்முக உதவியாளர்(நிலம்) கலைவாணி, உதவி ஆணையாளர் கலால் வரதராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பால் சொசைட்டியில் ₹8 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Milk Society ,Deferment Meeting ,Ranipet Collector's Office ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு...