×

மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்

சேலம், செப்.26: திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்து கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக 665 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் பேசுகையில், ‘‘ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இம்மனுக்கள் மீது உரிய தீர்வுகள் காணப்படுகிறது. இருப்பினும் அனைத்து மனுக்களுக்கும் சரியான பதிலை நிலுவையின்றி உடனுக்குடன் அலுவலர்கள் வழங்கிட வேண்டும். குறிப்பாக ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் மிகுந்த கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும். மேலும், முதல்வரின் காலை உணவுத்திட்டப்பணிகளை நாள்தோறும் தொடர்புடைய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும். மகளிர் உரிமைத்திட்டம் குறித்து பெறப்படுகின்ற மேல்முறையீட்டு மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்