×

பெரம்பலூர் மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் கண்காணிக்க 95 அதிகாரிகள் அதிரடி நியமனம்

பெரம்பலூர்,செப்.26: பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகளை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்களை நியமித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பொருளாதார சூழ்நிலையால் எந்த ஒரு மாணவ, மாணவரின் கல்வியும் தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய அடித்தட்டு மாணவ, மாணவிகளின் நிலை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவித்துள்ள இந்தத் திட்டமானது பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளிகள், ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளிகள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக் கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.

இந்தத்திட்டத்தின் மூலம் 263 பள்ளிகளைச் சேர்ந்த 16,020 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஆக.25ம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. அன்றே ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குத் தேவையான உணவுப்பொருட்களை செப்.29ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என்று அரசால் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் செப்.22ம் தேதியே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது?, மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப் படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்களை நியமித்து கலெக்டர் உத்தர விட்டுள்ளார். ஒவ்வொரு அலுவலருக்கும் 2 முதல் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொறுப்பு அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் காலை உணவு தயாரிக்கும் பணி காலை 6 மணிக்கு துவங்கி, காலை 8.15 மணிக்குள் முடிக்கப்பட்டு, காலை 8.45 மணிக்குள் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கப்படுகின்றதா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருட்கள் அக்டோர் மாதம் பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா? என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும் அன அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் கண்காணிக்க 95 அதிகாரிகள் அதிரடி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur district ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...