×

கோயம்பேட்டில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 பேர் பரிதாப பலி: மாணவன் உட்பட இருவர் படுகாயம்

அண்ணாநகர்: கோயம்பேட்டில் அடுத்தடுத்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். மாணவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். கோயம்பேடு மார்க்கெட் அருகே, நேற்று முன்தினம் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில், அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (20). இவர், கோயம்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (19). இவர் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் நேற்று முன்தினம் நண்பர்களை பார்ப்பதற்காக பைக்கில் கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றனர்.

அப்போது அங்கு செங்கல் லோடுடன் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் பைக் எதிர்பாராதவிதமாக மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அபிஷேக் பரிதாபமாக இறந்தார். ஜெகதீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் டிரைவர் சையத்முஸா (43). இவர், செங்குன்றம் பகுதியில் கோழிகளை டெலிவரி செய்வதற்கு சரக்கு வாகனத்தில் கிளீனர் அப்துல் ரகுமான் (20) என்பவருடன் நேற்று முன்தினம் வந்தார். வாகனத்தின் பின்புறம் சையத் முஸாவின் மகன் அமர்ந்திருந்தார். கோயம்பேடு நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி, அவரது சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சையத்முஸா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிளீனர் அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். சையத்முஸாவின் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post கோயம்பேட்டில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 பேர் பரிதாப பலி: மாணவன் உட்பட இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Successive road crash ,Coimbet ,Annagar ,Coimpet ,Coimbed Market ,Road ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது