×

கோயம்பேடு கட்சி தலைமை மீதுள்ள விரக்தியால் மாற்று கட்சிக்கு தாவும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோயம்பேடு கட்சியில என்ன பிரச்னை, கொத்தாக அப்படியே கட்சி மாறப்போறங்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் கோயம்பேடு கட்சி நிர்வாகிகள் பலர் சொந்த பணத்தை செலவு செய்து போட்டியிட்டனர். அவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு பணம் சப்ளை செய்யப்படும் என்று கோயம்பேடு கட்சி தலைமை உறுதி அளித்திருந்ததாம். அவர்களும் உற்சாகத்தில் வீடு, நகை உள்பட பலவற்றை அடமானம் வைத்து தேர்தலில் போட்டியிட்டாங்க. தேர்தலில் ஜெயிக்க வில்லை என்றாலும் மாவட்டத்தில் கட்சி உயிர்போடு இருப்பதை அரசியல் கட்சிகளிடையே காட்டினர். ஆனால், கோயம்பேடு கட்சி தலைமை தேர்தலில் செலவு செய்தால் நிதி கிடைக்கும் என்று சொன்னதால் போட்டியிட்டோம். தேர்தல் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், நமக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தலைமை இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறது. இனிமேலும் கோயம்பேடு கட்சியில் இருந்தால் செல்வம், செல்வாக்கு, வாக்கு ஆகியவற்றை இழக்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலின்போதும் எங்கள் மாவட்டத்துக்கு மாநிலத்தில் இருந்து பாப்புலரான தலைவர் வந்து பிரசாரம் செய்யவில்லை. இது எங்களை கட்சியில் இருந்து கழுவிவிட்டது போல இருக்கு என்ற நினைப்புக்கு கோயம்பேடு கட்சி நிர்வாகிகள் வந்து இருக்காங்களாம். இதையொட்டி மன்னர் மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு கட்சியினர் எந்த கட்சியில் இணையலாம் என்று ஒரு முடிவுக்கு வந்து இருக்காங்களாம். அப்படி அவர்கள் கூண்டோடு ேவறு கட்சிகளுக்கு இடம் மாறினால், மாவட்டத்தில் கட்சியே இருக்காது என்பதை கோயம்பேடு தலைமை உணர வேண்டும். இந்த தகவல் கோயம்பேடு கட்சி தலைமைக்கு தெரியவந்ததும், தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பித்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனை நம்பி கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு சென்ற நிர்வாகிகள் செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிர்வாகிகளுக்கு பணம் வந்து சேரவில்லை. இனி கோயம்பேடு கட்சிக்காரரின் உடல்நிலையை கணக்கில் கொண்டு அமைதியாக இருந்தோம். இனிமேல் அவரது உடலை பார்த்தால் எங்கள் அரசியல் எதிர்காலம் காலாவதியாகிவிடும் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சியே கந்தலாகி இருக்கு இதுல மாஜி அமைச்சர்கள் இடையில் பனிப்போர் நீடிப்பதை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் ‘ஜெய’ என்ற பெயர் தொடக்கத்தை கொண்டவர் பார்வையாளர்கள் வரிசையில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தாராம். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இலை கட்சியினர் அவரை பார்த்து வணக்கம் செலுத்தினாங்களாம். இதை பார்த்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் ‘மணியானவர்’ டென்ஷனாகி அவரது விசுவாசிகளை அழைத்து அவர் அமர்ந்து இருக்கும் இடத்துக்கு முன்பு அவரை மறைக்கும் வகையில் இருக்கைகளை போட்டு அதில் கட்சி தொண்டர்களை அமர செய்தாராம். இதனால் ஜெய என்ற பெயரை கொண்டவர் தொண்டர்களுடன் தொண்டர்களாய் நடுவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். உன்னால் தான் எனக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் சூழ்நிலை நிலவுகிறது. இதில் தொண்டர்களிடம் ஆதரவு கேட்பது போல் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய். அதை எப்படி சரி செய்வது என யோசித்துதான் சூசகமாக மணியானவர் இதை செய்தார் என இலை கட்சியினர் பேசிக் கொண்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கள்ளச்சாராய விற்பனையில் பண்ட மாற்று முறைக்கு மாறியவர்களை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சாராய ஒழிப்பு வெயிலூர் மாவட்டத்துல தீவிரமா நடக்குது. இதுல ஒடுக்கமான ஏரியாவுல மேலான அரசன் பெயர் கொண்ட கிராம மலையில இருந்து ரோப் கார் முறையை பயன்படுத்தி சாராய வியாபாரிகள், கயிறு கட்டி கீழே உள்ள மரத்துல இணைச்சு இருந்தாங்க. குடிமகன்கள் பையில பணம் வச்சு அனுப்பினா, மேல இருந்து சாராயம் சப்ளை செய்வாங்க. போலீஸ் மலைக்கு போறது தெரிஞ்சா சாராய வியாபாரிகள் ஓடிடுவாங்க. ஆனாலும் போலீசார் அடிக்கடி ரெய்டு நடத்தி ரோப் கார் முறையில சாராயம் விக்குறத தடுத்துட்டாங்க.

தொடர்ந்து ரகசியமாக மலைக்கு சென்று அடிக்கடி சோதனை நடத்தி சாராயத்த அழிக்குறாங்க. இதுபோல 2 நாளுக்கு முன்னாடி போலீசார் குடிமகன்கள் போல சாதாரண உடையில மலைக்கு போய்ட்டாங்க. ஆனா, போலீஸ் வந்தத தெரிஞ்சுக்கிட்ட சாராய வியாபாரிங்க அங்கிருந்து ஓடிட்டாங்க. பின்னர் அடுப்புகளை உடைச்சு, டியூப்கள்ல இருந்த சாராயத்தை கீழே ஊற்றி அழிச்சுட்டாங்க. அதோடு மலைக்கு போறப்போ சாராயம் வாங்க போய்ட்டு இருந்தவங்க கிட்ட, ‘அண்ணா கால் வலிக்குது சாராயம் வாங்க இன்னும் எவ்வளவு தூரம் போகனும். எந்த வழியா போகனும்’னு பேச்சு கொடுத்திருக்காங்க. மேலும் அவங்க கிட்ட பால், பருப்பு இருப்பது குறித்து கேட்டதுல போலீசாரையே அதிர வைக்கும் வகையில பல விஷயங்கள் வெளிவந்திருக்குது.

சாராய வியாபாரிகள் நவீன ரோப் கார் முறையில சாராயம் வித்தது மட்டுமில்லாம, பழங்கால பண்ட மாற்று முறையிலயும் சாராயம் வித்திருக்காங்க. கிராமங்கள்ல இருந்து பால் வியாபாரிங்க, 1 லிட்டர் பால் கொண்டு சென்று ெகாடுத்துட்டு 2 பாக்கெட் சாராயம் வாங்கி குடிச்சிருக்காங்க. இதுபோல பருப்பு, அரிசின்னு வீட்ல இருக்குற மளிகை பொருட்கள், அண்டா, குண்டான்னு எல்லாத்தையும் கொண்டு சென்று கொடுத்துட்டு சாராயம் வாங்கி குடிச்சிருக்காங்க. இதுல ஒரு சிலர் ரேஷன் கார்டை அடமானம் வச்சும் மாதத்துக்கு 20 பாக்கெட் வரை சாராயத்த வாங்கி குடிச்சிருப்பது தெரிய வந்திருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.

The post கோயம்பேடு கட்சி தலைமை மீதுள்ள விரக்தியால் மாற்று கட்சிக்கு தாவும் நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Dadu ,Alternative Party ,wiki ,Yananda ,Coimbade Party ,Peter Mama ,
× RELATED பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி...